ஆமதாபாதில் ஐ.பி.எல்., இறுதி போட்டி சிவகுமார் குற்றச்சாட்டு
ஆமதாபாதில் ஐ.பி.எல்., இறுதி போட்டி சிவகுமார் குற்றச்சாட்டு
ADDED : மே 06, 2026 11:50 PM

பெங்களூரு: ஐ.பி.எல்., இறுதி போட்டி ஆமதாபாதில் நடத்தப்படுவதற்கு பின்னணியில் பலரது கைகள் இருப்பதாக துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த மைதானத்தில் போட்டி நடத்தினால், எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவசமாக இரண்டு டிக்கெட்டுகள் கொடுக்க வேண்டும். இதனால், வசூல் பாதிக்கப்படும். எனவே, இறுதி போட்டியை வேறு மைதானத்தில் நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடக்க உள்ளதாக சமீபத்தில் பி.சி.சி.ஐ., அறிவித்தது. இதனால் ஆர்.சி.பி., ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுவதால் தான், இறுதி போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டது என கூறப்படுவதில் உண்மை கிடையாது.
இதற்காகத்தான் மைதானம் மாற்றம் செய்யப்பட்டது என்றால், அது குறித்து, பி.சி.சி.ஐ., அறிக்கை அளிக்க வேண்டும். அதன் பிறகு, இவ்விவகாரத்தில் நான் பதில் தருகிறேன்.
பெரிய மைதானத்தில் போட்டி நடத்தினால், லட்சக்கணக்கில் ரசிகர்கள் போட்டியை காண முடியும் என்பதற்காக மைதானம் மாற்றப்பட்டிருக்கலாம். பெங்களூரில் நடக்கவிருந்த போட்டி, ஆமதாபாத்திற்கு மாற்றப்பட்டதற்கு பின்னணியில் பலரது கைகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
