'சிவகுமாருக்கு காலி தட்டு தான் மிச்சம்' : எதிர்க்கட்சி தலைவர் அசோக் நையாண்டி
'சிவகுமாருக்கு காலி தட்டு தான் மிச்சம்' : எதிர்க்கட்சி தலைவர் அசோக் நையாண்டி
ADDED : மே 27, 2026 06:46 AM

ஹாசன்: ''முதல்வராக சித்தராமையா தொடருவார். துணை முதல்வர் சிவகுமாருக்கு காலி தட்டு தான் கிடைக்கும்,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.
ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி: மாநில அரசின் கடன், 7 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. சித்தராமையா பதவி விலகும் நேரத்தில், 10 லட்சம் கோடி ரூபாயை எட்டும். கே.சி.ரெட்டி முதல் பசவராஜ் பொம்மை வரை 47 சதவீதம் கடன் வாங்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் 53 சதவீதம் கடன் வாங்கப்பட்டு உள்ளது.
தவறியது ஏன்? வருமானத்தின் அடிப்படையில் ஏழைகளுக்கான திட்டங்களை பா.ஜ., அரசு செயல்படுத்தியது. ஆனால், காங்கிரசோ, மின்சாரத்துக்கான வாக்குறுதி திட்டங்களை அறிவித்தது. ஆனால், போதுமான அளவு வழங்க தவறிவிட்டது.
அரசின் கருவூலம் காலியாக இருப்பதால், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளின் உணவை குறைக்க போகிறது. அன்னபாக்யா திட்டம், சித்தராமையாவின் லட்சிய திட்டமல்ல. தற்போது வரை மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய அரிசி, மக்களுக்கு சென்றடைந்து வருகிறது. இதுவரை 10 கிலோ அரிசி வழங்குவதாக அளித்த வாக்குறுதியை, மாநில அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
கடந்த மூன்று மாதமாக பயனாளிகளுக்கு அரசு மாதாந்திர உதவி தொகையை வழங்கவில்லை. தகுதியவற்றவர்களை விலக்குவதாக சாக்குபோக்கு கூறுகிறது.
மாவட்ட பொறுப்பு அமைச்சர், 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் கூறி உள்ளார். ஆனால் அமைச்சர்களோ, மக்கள் பிரச்னையை தீர்க்காமல் டில்லிக்கு செல்கின்றனர்.
பட்கலில் பேரணி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க அரசிடம் நிதியில்லை. கலால் வரி மூலம் அரசு இயங்குகிறது. ஆலந்த் சம்பவத்தில் போலீசாரை தாக்கியவர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதன் விளைவாக, பட்கலில் கோவில் இடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
இது தொடர்பாக வரும் 29 ம் தேதி பட்கலில் பேரணி நடத்தப்படும். ஹிந்துக்களை பாதுகாப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. முஸ்லிம்களை திருப்திபடுத்தும் அரசியல் செய்கிறது.
எரிபொருள் விலை உயர்வால், மத்திய அரசுக்கு ஒரு பைசா கூட வருவாய் கிடைக்காது. ஆனால், மாநில அரசுக்கு, 6,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. இப்படி இருக்கையில், மே 30ம் தேதி எந்த முகத்தை வைத்து கொண்டு காங்கிரஸ் போராட்டம் நடத்தும்.
காங்கிரஸ் மேலிடம் முதல்வரை மட்டும் டில்லிக்கு அழைத்திருந்தாலும், அமைச்சர்களையும் அழைத்து சென்றுள்ளனர். எனவே சித்தராமையா முதல்வராக தொடருவார். ஆனால் சிவகுமாருக்கு வெறும் தட்டு தான் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
