/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகை
/
காங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகை
காங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகை
காங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகை
ADDED : ஜூலை 03, 2025 11:06 PM

மாநிலங்களில் காங்., ஆட்சிக்கு வந்தால், பெரும்பாலும் மாநில தலைவராக இருப்பவரே முதல்வராக்கப்படுவார். கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருக்கும், துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், 2023 சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
ஆனாலும் சிவகுமார் முதல்வர் ஆகும் வாய்ப்பை, மூத்த தலைவரான சித்தராமையா தட்டி பறித்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக முதல்வர் மாற்றம் குறித்து பலரும் பேசி, கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. 'நானே 5 ஆண்டுகளும் முதல்வர்' என்று கூறி, அதிகார மாற்ற பிரச்னைக்கு, சித்தராமையா நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்தார்.
சதீஷ் 'துண்டு'
இதற்கிடையில், பெங்களூரில் முகாமிட்டு, மூன்று நாட்களாக 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தலைவரை, முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதுபற்றி சிவகுமாரிடம், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசி உள்ளார்.
'உங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றால், முதலில் மாநில தலைவர் பதவியை தியாகம் செய்ய வேண்டும்' என்று கூறி இருக்கிறார். மாநில தலைவர் பதவியை விட்டு தர மாட்டேன் என்று, சிவகுமார் மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் அரசியல் கணக்குகளும் உள்ளது.
சிவகுமாருக்கு 5 ஆண்டுகள் முதல்வராக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. வரும் நவம்பரில் முதல்வர் ஆனால், இரண்டரை ஆண்டுகள் மட்டும் பதவியில் இருக்க முடியும்.
வரும் 2028 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அவர் முதல்வராக தொடருவாரா என்பதில் உறுதி இல்லை. பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஏற்கனவே, முதல்வர் பதவிக்கு துண்டு போட்டு உள்ளார்.
அதிக வாய்ப்பு
இப்போது முதல்வராக பொறுப்பு ஏற்றால், மாநில தலைவர் பதவியை கண்டிப்பாக விட்டு தர வேண்டும். அப்படி நடந்தால், தலைவர் பதவி சதீஷ் ஜார்கிஹோளி வசம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சதீஷ் தலைவராக இருந்து 2028 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சிவகுமாருக்கு கண்டிப்பாக முதல்வர் பதவி கிடைக்காது.
இதை மனதில் கொண்டே, தலைவர் பதவியை விட்டு தர மறுக்கிறார். ஒருவேளை இந்த ஆட்சி காலத்தில் முதல்வர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. 2028 தேர்தலையும் தனது தலைமையில் காங்கிரஸ் சந்திக்க வேண்டும்; மீண்டும் காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில், சிவகுமார் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனை மனதில் வைத்தே, சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று அவர் கூறி வருகிறார்.
கட்சி பெயர்
இதையடுத்து, டில்லி புறப்பட்டு சென்றுள்ள ரன்தீப் சிங் மீண்டும் வரும் 7ம் தேதி பெங்களூரு வர உள்ளார். இம்முறை மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், சித்தராமையாவை பதவியில் இருந்து இறக்கி அவரை பகைத்து கொள்ள வேண்டாம் என்று, காங்கிரஸ் மேலிடமும் நினைக்கிறது. இதற்கு பின்னணியிலும் அரசியல் உள்ளது.
பீஹார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமூக தலைவராக உள்ள சித்தராமையாவை மாற்றினால், அது பீஹார் தேர்தலில் எதிரொலிக்கும் என்று மேலிடம் கருதுகிறது.
கார்கேவால் பயம்
சிவகுமாரிடம் பல வழக்குகளில் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துகின்றன. ஒருவேளை சிவகுமாரை முதல்வராக்கி அவர் பதவியில் இருக்கும் போது, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போன்று கைது செய்யப்பட்டால், தங்கள் கட்சி பெயர் கெட்டுவிடும் என்றும் காங்கிரஸ் பயப்படுகிறது.
சித்தராமையாவுக்கு, எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து எதிர்ப்பு இல்லை. மக்கள் விரும்பும் தலைவராகவும் உள்ளார். ஒருவேளை அவரை பதவியில் இருந்து இறக்கி விட்ட பின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதல்வர் பதவி கேட்கலாம். இதன் மூலம் கட்சியில் பிரச்னை ஏற்படலாம் என்றும், மேலிடத்திற்கு பயம் உள்ளது.
கர்நாடகாவின் நீண்ட கால முதல்வராக பணியாற்றியவர் என்ற பெருமை தேவராஜ் அர்ஸுக்கு உள்ளது. அவர் ஏழு ஆண்டுகள் 238 நாட்கள் முதல்வராக இருந்தார். சித்தராமையா தற்போது 7 ஆண்டுகள் 48 நாட்கள் முதல்வராக உள்ளார்.
தேவராஜ் அர்ஸ் சாதனையை முறிடிக்கும் வகையில், இன்னும் 200 நாட்கள் பதவியில் இருக்க ஆசைப்படுகிறேன் என்றும், மேலிடத்திடம் அவர் கோரிக்கை வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.