/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசுக்கு சிவகுமார் கோரிக்கை
/
சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசுக்கு சிவகுமார் கோரிக்கை
சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசுக்கு சிவகுமார் கோரிக்கை
சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசுக்கு சிவகுமார் கோரிக்கை
ADDED : ஏப் 02, 2025 06:46 AM

துமகூரு : ''மறைந்த துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சுவாமிக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்,'' என்று, மத்திய அரசுக்கு, துணை முதல்வர் சிவகுமார் கோரிக்கை வைத்து உள்ளார்.
துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவகுமார சுவாமிகள். 'நடமாடும் கடவுள்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். தனது 111 வயதில் மரணம் அடைந்தார். நேற்று சிவகுமார சுவாமியின் 118வது பிறந்தநாள்.
இதையொட்டி மடத்தில் நடந்த சிவகுமார சுவாமி ஜெயந்தியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மடாதிபதி சித்தலிங்க சுவாமி ஆசி வழங்கினார்.
ஆன்மிக சேவை
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
வடமாநிலங்கள், தென்மாநிலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று கூறுவது முற்றிலும் பொய். இதனை நிரூபிக்க சிலர் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. வடக்கு - தெற்கு பிரிவினை குறித்த கருத்துகள் முடிவுக்கு வர வேண்டும். மத விஷயங்களில் வடக்கிற்கு, தெற்கு புதிய திசையை வழங்கியதற்கு கர்நாடகா சான்றாக உள்ளது.
இந்தியாவின் தன்மை எப்போதும் ஆன்மிகம், மனித குலத்திற்கு சேவை செய்வதாக உள்ளது. இந்த அடையாளத்தை நாம் எப்போதும் பின்பற்ற வேண்டும். வரலாற்று சவால்கள் இருந்த போதும் நாட்டின் மரபுகளை பாதுகாத்த துறவிகளுக்கு எனது பாராட்டுகள். பல படையெடுப்பாளர்கள் இந்திய கலாசாரத்தை அழிக்க முயன்றனர். ஆனால் கலாசாரத்தை துறவிகள் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
துறவிகள் பாதை
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
ஜாதி, மத பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் உணவு, தங்குமிடம், கல்வியை வழங்கி சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு அளித்தவர் சிவகுமார சுவாமிகள். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
சிவகுமார சுவாமிகள், எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர். என் பெற்றோர் எனக்கு சிவகுமார் என்று பெயரிட்டது எனது அதிர்ஷ்டம். நம் உடல் பசித்தால் நமக்கு உணவு தேவை. மனம் பசித்தால் பிரார்த்தனை தேவை. நான் மதம், கடவுளை முழுமையாக நம்புகிறேன். துறவிகள் வகுத்த பாதை, போதனைகள் நமது வாழ்க்கைக்கு பலம் கொடுக்கிறது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, அவருடன் இந்த மடத்திற்கு வந்துள்ளேன்.
இங்கிருந்து திரும்பும்போது சித்தகங்கா மடத்தின் அன்னதான நிகழ்ச்சியை, அரசு திட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறினார். இதனால் மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. சிவகுமார சுவாமியின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ளது. அனைவரையும் ஒருங்கிணைத்து பல துறையில் சாதித்தார். மடத்தை சுற்றி பாறைகள் உள்ளன. பாறைகள் இயற்கையானது. உடைந்தால் அது வடிவம்; வணங்கப்பட்டால் அது கலாசாரம்.
இவ்வாறு அவர் பேசினார்.