/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமாரின் சர்ச்சை பேச்சு தர்ம சங்கடத்தில் மேலிடம்
/
சிவகுமாரின் சர்ச்சை பேச்சு தர்ம சங்கடத்தில் மேலிடம்
சிவகுமாரின் சர்ச்சை பேச்சு தர்ம சங்கடத்தில் மேலிடம்
சிவகுமாரின் சர்ச்சை பேச்சு தர்ம சங்கடத்தில் மேலிடம்
ADDED : மார் 26, 2025 05:20 AM

'அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும்' என, துணை முதல்வர் சிவகுமார் கூறியது, லோக்சபா, ராஜ்யசபாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால், காங்கிரஸ் தலைமை தர்மசங்கடத்தை எதிர்கொண்டுள்ளது.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யப்படும்' என்று கூறியிருந்தார்.
இவரின் பேச்சுக்கு மாநிலத்தில் பா.ஜ., - ம.ஜ.த., மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இவ்விஷயம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. அங்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் அதிகரித்து அமளி ஏற்பட்டது. இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
சிவகுமாரின் கருத்தால் எரிச்சல் அடைந்த கட்சி மேலிடம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலம், புதுடில்லிக்கு வரும்படி சிவகுமாருக்கு அழைப்பு விடுத்தது. அவரும் நேற்று முன்தினம் புதுடில்லி சென்றார்.
அங்கு அவரிடம், அரசியலமைப்பு சட்டம் மாற்றம் குறித்த கருத்துக்கு விளக்கம் கேட்கப்பட்டது. விளக்கத்தை அளித்த பின், மீண்டும் அவர் பெங்களூரு திரும்பிவிட்டார்.
இந்த பயணம் குறித்து சிவகுமார் கூறியதாவது:
பொது செயலர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்ததால், கட்சி தலைவர்களை சந்திக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது அவர்களை சந்திப்பேன். நான் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றேன்.
அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் இம்மாதம் 27ல் நடக்க உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த அழைத்திருந்தனர். இக்கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.
ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மார்ச் 28ல் ஏ.ஐ.சி.சி., உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்கவும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி தலைமை அழைப்பின்படி தான் அவர், புதுடில்லி சென்றார். ஆனால், அவரோ, கட்சித் தலைவர்களை சந்திக்கவில்லை. 'இம்மாதம் 27, 28ல் நடக்கும் பல்வேறு கூட்டங்கள் குறித்த பணிகள் தொடர்பாக விசாரிக்க சென்றிருந்தேன்' என்று கூறுகிறார்.
அரசியலமைப்பு சட்ட விவகாரம் தொடர்பாக அடக்கி வாசிக்கும்படி கட்சி மேலிடம் கூறி உள்ளதாகவும்; இதுகுறித்து வாய் திறக்க மாநில தலைவர்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -