ADDED : மே 06, 2026 03:57 AM
- நமது நிருபர் -: தேர்தலுக்கு திட்டம் வகுப்பதில், சாணக்கியர் என, அழைக்கப்படும், கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் திட்டங்கள், அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பலன் அளிக்கவில்லை. அங்கு காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சிவகுமார் என்றாலே, 'டிரபில் ஷூட்டர்' என்றே கருதப்படுகிறார். கட்சி கஷ்டமான சூழ்நிலையில் இருந்த போது, பக்க பலமாக நின்றவர்; இப்போதும் நிற்பவர். தேர்தலுக்கு திட்டங்கள் வகுப்பதில் கை தேர்ந்தவர். இதை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம், அவரை நன்றாகவே பயன்படுத்துகிறது.
கடந்த, 2023ல் கர்நாடகா சட்டசபை தேர்தல் பொறுப்பை ஏற்று, கட்சியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தியவர். இதற்கு முன் சிவகுமாரிடம், எந்த தேர்தல் பொறுப்பை கொடுத்தாலும் சிறப்பாக திட்டங்கள் வகுத்து, கட்சியை வெற்றி பெற வைப்பார்.
இதற்காகவே கட்சியில் அவருக்கு, 'தேர்தல் சாணக்கியர்' என்ற பெயர் உள்ளது. அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து, அசாம் மாநில தேர்தல் பொறுப்பை, காங்., மேலிடம் ஒப்படைத்தது.
அவரும் ஏழெட்டு முறை அசாமுக்கு சென்றார். கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, பிரசார திட்டங்களை வகுத்தார்.
பம்பரமாக சுற்றி வந்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். அதனால், இம்முறை அசாமில், காங்கிரஸ் சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் என, நம்பினார். மேலிடமும் எதிர்பார்த்தது.
ஆனால், காங்கிரஸ் தோற்றுள்ளது. அதனால், சிவகுமாரின் திட்டங்கள் பலன் அளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வீசிய அலை, நன்றாகவே வேலை செய்துள்ளது.
அதே போன்று அசாமிலும், ஆளுங்கட்சியான பா.ஜ.,வுக்கு எதிரான அலை இருந்தது. அதை மேலும் அதிகமாக்கி, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த முடியாமல் போனது, சிவகுமாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வகுத்த திட்டங்கள், பலன் அளிக்கவில்லை. காங்., - எம்.பி., பிரியங்காவும், அசாம் தேர்தல் பொறுப்பாளராக இருந்தார்.
அசாம் தோல்வி, சிவகுமாரின் முதல்வர் கனவில் மண்ணை போடலாம் என்று கூறப்படுகிறது.
ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியான பின், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் நடக்கும்.
சிவகுமார் முதல்வராவார் என்று, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். அவரும் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்பதில், பிடிவாதமாக இருந்தார். இதற்காக பல முறை டில்லிக்கு சென்று வெறுங்கையோடு திரும்பினார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, பொறுமையாக இருக்கும்படி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியிருந்தார்.
கேரளாவை தவிர, மற்ற நான்கு மாநிலங்களில், காங்கிரஸ் மண்ணை கவ்வியது. இத்தகைய சூழ்நிலையில், கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்தில் ஆர்வம் காட்டும் மனநிலையில் மேலிடம் இல்லை.
ஒருவேளை அசாமில் கட்சி வெற்றி பெற்றிருந்தால், சிவகுமாருக்கு சாதகமான சூழ்நிலை இருந்திருக்கும். இப்போது அப்படியில்லை.
பொதுவாக தோல்வியை ஒப்புக்கொண்டு, மவுனமாக அமர்ந்திருக்கும் குணம் சிவகுமாருக்கு இல்லை. போராட்ட குணம் உள்ளவர்.
முதல்வர் பதவி மீதான ஆசையை, அவர் விட்டுத்தரமாட்டார். மேலிடத்துக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து, முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் ஆச்சர்யப்பட முடியாது.தற்போதைக்கு தோல்விக்கான காரணங்களை, காங்கிரஸ் தன்னாய்வு செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளது. விரைவில் சிவகுமார் டில்லிக்கு செல்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
