கொலை வழக்கின் முக்கிய சாட்சி சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி
கொலை வழக்கின் முக்கிய சாட்சி சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி
ADDED : மே 07, 2026 10:59 PM
பெலகாவி: கொலை வழக்கில் சாட்சி சொல்ல சென்றவரை, மர்ம கும்பல் கடத்தி சென்ற நிலையில், அவர் துாக்கில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம், சாங்க்லி மாவட்டம், ஜத் தாலுகாவின் கொசாரி கிராமத்தில் வசித்தவர் தாதாசோ இமகரா, 56. இவருக்கும், உறவினர் குடும்பத்தினருக்கும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு கிணறு விஷயத்தில் தகராறு ஏற்பட்டது.
இதே காரணத்தால், தாதாசோ இமகராவின் மகனையும், தம்பியையும் உறவினர்கள் கொலை செய்தனர்.
கொலை தொடர்பாக, 10 பேர் மீது வழக்கு பதிவானது. ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர். வழக்கில் தாதாசோ இமகரா முக்கிய சாட்சியாக இருந்தார். நேற்று முன்தினம் சாட்சி சொல்வதற்காக, சாங்க்லி நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. நீதிமன்றத்துக்கு சென்ற அவரை, நாகஜ் கிராஸ் அருகில் மர்ம கும்பல் கடத்தி சென்றது.
இது தொடர்பாக, ஜத் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் செய்தனர். போலீசாரும் கடத்தல்காரர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின், ஹனமாபுரா புறநகரின், ஜம்பகி சாலை அருகில் உள்ள மரத்தில், தாதாசோ இமகரா துாக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார். நேற்று காலையில், இதை கவனித்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதானி போலீசார் அங்கு வந்து, உடலை மீட்டனர். தாதாசோ இமகாரின் கைகளிலும், விரல்களிலும் காயங்கள் உள்ளன.
அவர் கொலை செய்யப்பட்டதாக, குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். தகவலறிந்து மஹாராஷ்டிராவின் ஜத் போலீசாரும், சம்பவ இடத்துக்கு வந்தனர்.
சாட்சியை அழிக்கும் நோக்கில், இவரை கடத்தல்காரர்கள் கொலை செய்தனரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது, தற்போதைக்கு தெரியவில்லை.
கர்நாடகா, மஹாராஷ்டிரா போலீசார் இணைந்து விசாரணை நடத்துகின்றனர்.
