/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
4,500 ஏக்கரை கேட்கும் மைசூரு மன்னர் குடும்பத்தால் அதிர்ச்சி!: சாம்ராஜ் நகரின் சித்தய்யனபுரா கிராம மக்கள் கலக்கம்
/
4,500 ஏக்கரை கேட்கும் மைசூரு மன்னர் குடும்பத்தால் அதிர்ச்சி!: சாம்ராஜ் நகரின் சித்தய்யனபுரா கிராம மக்கள் கலக்கம்
4,500 ஏக்கரை கேட்கும் மைசூரு மன்னர் குடும்பத்தால் அதிர்ச்சி!: சாம்ராஜ் நகரின் சித்தய்யனபுரா கிராம மக்கள் கலக்கம்
4,500 ஏக்கரை கேட்கும் மைசூரு மன்னர் குடும்பத்தால் அதிர்ச்சி!: சாம்ராஜ் நகரின் சித்தய்யனபுரா கிராம மக்கள் கலக்கம்
ADDED : ஏப் 11, 2025 11:13 PM

மைசூரு அரச குடும்பத்தினரின் சொத்துக்கள் தொடர்பாக, இவர்களுக்கும், மாநில அரசுக்கும் இடையே அவ்வப்போது விவாதங்கள் நடக்கின்றன. மைசூரு சாமுண்டி மலையின் சாமுண்டீஸ்வரி கோவில் நிர்வாகத்தை, தன் வசம் கொண்டு வரும் நோக்கில், சாமுண்டீஸ்வரி மேம்பாட்டு ஆணையத்தை அரசு அமைத்தது.
முதல்வரே ஆணைய தலைவராக இருந்தார். அரச குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து, அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் ஆணைய உறுப்பினர்களாக நியமித்தார்.
இது, அரச குடும்பத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 'மைசூரின் சாமுண்டீஸ்வரி கோவில், அரச குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து. ஆவணங்களிலும் கூட இதை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
'கோவில் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது. இதற்கு அரசு தனி ஆணையம் அமைத்தது சரியல்ல' என, ராஜமாதா பிரமோதா தேவியும், அவரது மகனும் மைசூரு பா.ஜ., - எம்.பி.,யுமான யதுவீர் உடையாரும் பகிரங்கமாக சாடினர்.
அதன்பின் பெங்களூரு அரண்மனை நிலம் விஷயத்திலும் அரசுக்கும், அரச குடும்பத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. பல்லாரி சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, அரண்மனை இடத்தை கையகப்படுத்த மாநில அரசு முற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, அரச குடும்பத்தினருக்கு வழங்க வேண்டியிருந்தது.
இவ்வளவு தொகையை கொடுத்தால், பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால், அரண்மனை நிலத்தை செலவில்லாமல் பயன்படுத்த, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி, அரச குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
அரச குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் சிதறி கிடப்பதால் அவற்றை மீட்பதில், பிரமோதா தேவி ஆர்வம் காட்டுகிறார். சாம்ராஜ்நகர் தாலுகாவிலும் மஹாராஜாவுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.
இதை தன் பெயருக்கு மாற்றி பட்டா செய்து தரும்படி, சில நாட்களுக்கு முன் சாம்ராஜ் நகர் கலெக்டருக்கு பிரமோதா தேவி கடிதம் எழுதி இருந்தார்.
அதில், 'சாம்ராஜ்நகர் தாலுகாவின், பல்வேறு இடங்களில் மைசூரு மஹாராஜாவுக்கு சொந்தமான 4,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் உள்ளன. இவை மஹாராஜாவின் தனிப்பட்ட சொத்து என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. எனவே, அந்த சொத்துக்களை, என் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தாருங்கள்' என, வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கலெக்டர் ஷில்பா நாகும், பிரமோதா தேவியிடம் உரிய ஆவணங்கள் இருந்தால், அரசிடம் ஆலோசனை பெற்று முடிவு செய்வதாக கூறினார்.
பிரமோதா தேவி கேட்டபடி, 4,500 ஏக்கர் நிலத்தை அவரது பெயரில் பட்டா செய்து கொடுத்தால், ஒரு கிராமமே காலியாகும் அபாயம் உள்ளது. குறிப்பிட்ட, 4,500 ஏக்கர் நிலத்தில், சாம்ராஜ் நகரின் சித்தய்யனபுரா கிராமமும் அடங்கும். எனவே, இங்குள்ள மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
சித்தய்யனபுரா கிராமத்தின் இயற்பெயரே ஜெயசாம ராஜேந்திர புரம். இங்கு பெருமளவிலான நிலம் அரச குடும்பத்தினருக்கு சொந்தமானது. இதை, அன்றைய மஹாராஜா ஜெயசாம ராஜேந்திர உடையார், மக்களுக்கு தானமாக வழங்கினார்.
அங்கு மக்கள் குடியிருக்கின்றனர். விவசாயம் செய்து பிழைக்கின்றனர். இதை பிரமோதா தேவியின் பெயருக்கு பட்டா செய்து கொடுத்தால், பரம்பரை பரம்பரையாக வசிக்கும் மக்கள், கிராமத்தையே காலி செய்ய வேண்டி வரும்.
இக்கிராமத்தில், 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இன்றைக்கும் இவர்களின் வீட்டு பூஜை அறையில், மஹாராஜா ஜெயசாம ராஜேந்திர உடையாரின் படத்தை வைத்து பூஜிக்கின்றனர்.
ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளன்று, அவரது படத்தை வைத்து ஊர்வலம் நடத்தி கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இப்போது, 'வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டி வருமோ' என்ற கவலையில் உள்ளனர்.
கிராமத்தினர் கூறியதாவது:
மஹாராஜா ஜெயசாம ராஜேந்திர உடையார், 1,035 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு தானமாக வழங்கினார். 1982ல் அமைச்சராக இருந்த ராச்சையா காலத்தில், அன்றைய அரசு எங்களுக்கு நிலத்தில் சாகுபடி செய்ய உரிமை பத்திரம் வழங்கியது. இப்போதும் நாங்கள், மஹாராஜாவின் பெயரை கூறி கொண்டு வாழ்கிறோம்.
இந்நிலையில், ராணி பிரமோதா தேவி பெயருக்கு, மாவட்ட நிர்வாகம் பட்டா செய்து கொடுத்தால், நாங்கள் கிராமத்தை காலி செய்ய வேண்டி வரும். அப்படி நடந்தால், நாங்கள் அனைவரும் மைசூரு அரண்மனைக்கு செல்வோம். அரச குடும்பத்தினரே, எங்களுக்கு உணவு, உடை, வசிக்கும் இடம் கொடுத்து காப்பாற்றட்டும்.
பிரமோதா தேவி பெயருக்கு பட்டா கொடுத்தால், மொத்த கிராமமும் காலியாகும். நாங்கள் குழந்தை, குட்டிகளுடன் எங்கு செல்வது. நாங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் இங்குதான் இருப்போம். வேறு எங்கும் செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.