இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள் பெங்களூரில் அதிகரிப்பதால் அதிர்ச்சி
இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள் பெங்களூரில் அதிகரிப்பதால் அதிர்ச்சி
ADDED : ஏப் 30, 2026 12:17 AM
பெங்களூரு: சிறுவர்கள் கார், இருச்சக்கர வாகனங்கள் ஓட்டுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது தொடர்பாக பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது, போக்குவரத்து போலீசாருக்கு தலைவலியாக உள்ளது.
இது குறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் சிறுவர்கள் கார், இருச்சகர வாகனம் ஓட்டுவது அதிகரிக்கிறது. சிறுவர்கள் வாகனம் ஓட்ட, அனுமதி அளிக்க வேண்டாம் என, சமூக வலைதளங்கள் மூலம் பெற்றோருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் அவர்களின் அலட்சியத்தால், அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
பெற்றோர் மற்றும் உரிமையாளர்களின் பொறுப்பற்ற போக்கால், பட்டப்பகலில் சிறுவர்கள் கார், பைக் ஓட்டுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இவர்களால் விபத்துகள் நடக்கின்றன. பெங்களூரின் ஒவ்வொரு பகுதியிலும், இத்தகைய காட்சிகள் தென்படுகின்றன.
சிறுவர்கள் கார், பைக், ஸ்கூட்டர் ஓட்டுவது, தண்டனைக்குரிய குற்றமாகும். சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீது, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். பெற்றோருக்கு அதிகபட்சம் 25,000 ரூபாய் அபராதம் விதிக்க, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய, சட்டத்தில் இடம் உள்ளது.
சிறுவர்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் 816 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது 544 வழக்குகள் பதிவாகின. நீதிமன்ற உத்தரவுப்படி, அபராதம் விதிக்கப்பட்டது.
சிறு வயதினர் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிமீறலாகும். இவர்கள் மற்றவர் காயமடைய, உயிரிழக்க காரணமாகின்றனர். இது குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
சாலைகளில் சிறுவர்கள் வீலிங் செய்வது அதிகம். வீலிங் செய்யும் இடங்களை அடையாளம் கண்டு, போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். வீலிங் செய்ய பயன்படுத்தும் இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
