/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விநாயகர் சிலையில் செருப்பு: பா.ஜ., போராட்டம்
/
விநாயகர் சிலையில் செருப்பு: பா.ஜ., போராட்டம்
ADDED : செப் 22, 2025 03:59 AM

ஹாசன் : விநாயகர் சிலை மீது செருப்பை வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஹாசன் மாவட்டம், பேலுாரில் உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பூஜை செய்வதற்காக, நேற்று வழக்கம் போல அர்ச்சகர் வந்தார். விநாயகர் சிலையின் இரண்டு கைகளிலும் செருப்பு இருப்பது தெரிந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நகராட்சி அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கூறினார். பின்னர், நகராட்சி தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்தனர்.
இதையறிந்த பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி, பேலுார் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் ஆகியோர் கோவில் பகுதிக்கு சென்று போராட்டம் நடத்தினர். நிலைமை தீவிரமாவதை உணர்ந்த எஸ்.பி., முகமது சுஜிதா, விநாயகர் சிலையை அவமதித்த நபரை கைது செய்ய தனிப்படை அமைத்தார்.
இதையடுத்து, கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஒரு பெண், தனியாக வந்து செருப்புகளை விநாயகர் சிலை மீது வைத்து விட்டு செல்வது தெரிந்தது.
அந்த காட்சிகளை வைத்து விசாரித்ததில், ஹாசன் விஜயநகர் லே - அவுட் பகுதியை சேர்ந்த லீலம்மா, 45, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.
எஸ்.பி., முகமது சுஜிதா கூறுகையில், ''விஜயநகர் லே - அவுட்டை சேர்ந்த லீலம்மா, மன நலம் பாதிக்கப்பட்டவர், '' என்றார்.
'மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், எப்படி விநாயகர் சிலையை அவமதிப்பார். இது நம்பும் படியாக இல்லை' என, பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்தனர்.