தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவர்களுக்கு கிடைக்காத ஷூக்கள், சாக்ஸ், ஸ்வெட்டர்

 மாணவர்களுக்கு கிடைக்காத ஷூக்கள், சாக்ஸ், ஸ்வெட்டர்

 மாணவர்களுக்கு கிடைக்காத ஷூக்கள், சாக்ஸ், ஸ்வெட்டர்


ADDED : செப் 25, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, இன்னும் ஷூ, சாக்ஸ், பை, ஸ்வெட்டர் வழங்கவில்லை. பள்ளிகள் திறந்து நான்கு மாதங்கள் ஆகியும், அதிகாரிகளின் அலட்சியத்தை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், ஷூ, சாக்ஸ், பை, ஸ்வெட்டர் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் பள்ளி திறப்பதற்கு முன், மாணவர்களுக்கு தேவையானவற்றை எப்போதும் அரசு, மாநகராட்சி வழங்கியது இல்லை. இரண்டு, மூன்று மாதங்கள் தாமதமாகும்.

இந்த கல்வியாண்டிலும், இதே தாமதம் நீடிக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்து, நான்கு மாதங்கள் ஆகின்றன. எனினும், ஜி.பி.ஏ., பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இன்னும் ஷூ, சாக்ஸ், பை, ஸ்வெட்டர் வழங்கப்படவில்லை.

ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி தொழிலாளர்கள் உட்பட ஏழை குடும்பங்களின் சிறார்கள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான பொருட்களை, சரியான நேரத்தில் வழங்குவதில், அதிகாரிகள் அக்கறை காட்டுவது இல்லை.

மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், பை வழங்க டெண்டர் அழைக்கப்பட்டது. ஆனால், இரண்டு முறை டெண்டர் அழைத்தும், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கவில்லை. தற்போது மூன்றாவது முறையாக டெண்டர் விடப் பட்டுள்ளது.

இதில் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றால், மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும் என, ஜி.பி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல முறை டெண்டர் அழைத்தும், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்காமல் ஒதுங்க என்ன காரணம், டெண்டர் தொகை அல்லது நிபந்தனைகளால் பிரச்னையா, டெண்டர் தாமதமாவதில் ஊழல் காரணமா என, பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், ஸ்வெட்டருக்கான பணத்தை, மாணவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் செலுத்த, அரசு ஆலோசிக்கிறது. இதற்காக, பெற்றோரின் வங்கி கணக்கு விபரங்களை, சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த நடைமுறை முடிய, மூன்று மாதங்களாகும். அதற்குள் கல்வியாண்டு பெரும் பகுதி முடிந்துவிடும் என, பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us