மத்துாரில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதில் குமாரசாமி, காங்., - எம்.எல்.ஏ., பனிப்போர்
மத்துாரில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதில் குமாரசாமி, காங்., - எம்.எல்.ஏ., பனிப்போர்
ADDED : செப் 25, 2026 03:53 AM
மாண்டியா: ஆட்டோ ஸ்டாண்ட் கட்டும் விஷயத்தில், மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் குமாரசாமி - காங்கிரஸ் எம்.எல்.ஏ., உதய் இடையே, பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
மாண்டியா மாவட்டம், மத்துார் பஸ் நிலையம் எதிரே, ஆட்டோ ஓட்டுநர்களின் வசதிக்காக, சி.எஸ்.ஆர்., நிதியுதவியில், ஆட்டோ ஸ்டாண்ட் கட்ட, மத்திய அமைச்சர் குமாரசாமி, சில மாதங்களுக்கு முன், பூமி பூஜை செய்தார்.
பணிகள் துவங்கிய நிலையில், மத்துார் நகராட்சி அதிகாரிகள், நடைபதையில் பணிகள் நடக்கின்றன. முறைப்படி அனுமதி பெறவில்லை என, கூறி ஆட்டோ ஸ்டாண்ட் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
அது மட்டுமின்றி, பணிகளுக்காக கொண்டு வந்த பொருட்களையும், நகராட்சி கமிஷனர் ராதிகா பறிமுதல் செய்தார். இதற்கு மத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., உதய் நெருக்கடியே காரணம் என கூறப்படுகிறது.
நகராட்சி அதிகாரிகளின் செயலை, கடந்த மாதம் மாண்டியாவில் நடந்த, ஆலோசனை கூட்டத்தில் குமாரசாமி கண்டித்தார்.
ஆனால் மத்திய அமைச்சர் உத்தரவிட்டும், பணிகள் இன்னும் துவங்கவில்லை. எனவே டில்லியில் இருந்தே, காணொலி காட்சி மூலமாக, மத்துார் நகராட்சி கமிஷனர் ராதிகாவை கண்டித்தார்.
'எம்.எல்.ஏ., உதய் நெருக்கடிக்கு பணிந்து, நீங்கள் ஆட்டம் போடுகிறீர்கள். உடனடியாக பணிகளை துவக்க வாய்ப்பளியுங்கள். இந்த விஷயத்தில் எம்.எல்.ஏ.,வின் நெருக்கடிக்கு பணியாதீர்கள்' என, எச்சரித்தார்.
நகராட்சி அதிகாரிகள், ஆட்டோ ஸ்டாண்ட் கட்ட மாற்று இடத்தை தெரிவு செய்துள்ளனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்கள், சம்மதிக்கவில்லை. தங்களுக்கு அதே இடத்தில், ஸ்டாண்ட் வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கின்றனர்.
இதனால் அதிகாரிகள் தர்ம சங்கடத்தில் கையை பிசைகின்றனர்.
