துப்பாக்கி சுடும் போட்டி ஹூப்பள்ளி ஐஸ்வர்யா தேர்வு
துப்பாக்கி சுடும் போட்டி ஹூப்பள்ளி ஐஸ்வர்யா தேர்வு
ADDED : மே 07, 2026 11:08 PM

உலக இளையோர் துப்பாக்கி சுடும் போட்டிக்கு, இந்திய அணியில் ஹூப்பள்ளியின் ஐஸ்வர்யா பலேஹோசூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
உலக இளையோர் துப்பாக்கி சுடும் போட்டி, ஜெர்மன் நாட்டின் சுல் நகரில் வரும் ஜூலையில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும், துப்பாக்கி சுடுதலில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனையரை தேர்வு செய்து வந்தனர்.
போட்டியில் இந்திய அணியில் பங்கேற்க, கர்நாடகாவின் வடமாவட்டமான தார்வாடின் ஹூப்பள்ளி டவுன் வித்யாநகரை சேர்ந்த ஐஸ்வர்யா பலேஹோசூரும் தேர்வாகி உள்ளார். 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் பிரிவில் இந்திய ஜெர்சியை அணிந்து துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்த உள்ளார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், ''உலக அரங்கில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு எனது தந்தையும், துப்பாக்கி சுடும் போட்டி பயிற்சியாளருமான ரவிச்சந்திரன் தான் காரணம். அவரது தலைமையின் கீழ் நான் எடுத்த பயிற்சி, என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்து உள்ளது.
''கர்நாடக மாநில துப்பாக்கி சுடுதல் சங்கத்தில் இருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்தது. நம் நாட்டிற்காக குறைந்தது ஒரு தங்க பதக்கத்தை வென்று வருவது எனது குறிக்கோள். போட்டியில் சிறப்பாக செயல்பட என்னால் முடிந்த, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்,'' என்றார்.
- நமது நிருபர் -
