/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிலத்தடி பஜார் திட்டம் தோல்வி கடை வியாபாரிகள் அதிருப்தி
/
நிலத்தடி பஜார் திட்டம் தோல்வி கடை வியாபாரிகள் அதிருப்தி
நிலத்தடி பஜார் திட்டம் தோல்வி கடை வியாபாரிகள் அதிருப்தி
நிலத்தடி பஜார் திட்டம் தோல்வி கடை வியாபாரிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 03, 2025 05:11 AM

பெங்களூரு: தென் மாநிலங்களின் முதல் குளிர்சாதன வசதி கொண்ட, நிலத்தடி மார்க்கெட் என்ற பெருமையுடன், ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்ட, 'கிருஷ்ணதேவராய மாநகராட்சி பஜார்' திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
டில்லியில் இருப்பதை போன்ற, குளிர்சாதன வசதி கொண்ட, 'நிலத்தடி மார்க்கெட்' அமைக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டம் வகுத்தது. இதன்படி பெங்களூரின் விஜயநகரில், 13 கோடி ரூபாய் செலவில், நிலத்தடி மார்க்கெட் அமைக்கப்பட்டது.
விஜயநகரின் மக்கள் நெரிசல் மிகுந்த, சர்வீஸ் சாலையில் இருந்து, நடைபாதை வியாபாரிகளை இடமாற்றும் நோக்கில், குளிர்சாதன வசதி கொண்ட, நிலத்தடி மார்க்கெட் அமைக்கப்பட்டது. இது தென் மாநிலங்களில் முதல் குளிர்சாதன நிலத்தடி மார்க்கெட் என்ற பெருமை பெற்றுள்ளது.
ஓராண்டுக்கு முன்பு, 'கிருஷ்ணதேவராய மாநகராட்சி பஜார்' என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது. இங்கு 79 கடைகள் உள்ளன. இவற்றை பகிர்ந்தளிக்க முறைப்படி டெண்டர் அழைத்திருக்க வேண்டும். ஆனால் மாநகராட்சி செய்யவில்லை.
அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன் சில வியாபாரிகள் கடைகளை பெற்றுள்ளனர். யாரிடம் வாடகை செலுத்துகின்றனர் என்பதே தெரியவில்லை. இதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என, நடைபாதை வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து நடைபாதை வியாபாரிகள் சங்கத்தலைவர் தேவராஜ் கூறியதாவது:
பஜாரில் உள்ள கடைகளை, மாநகராட்சி அடையாளம் கண்ட வியாபாரிகளுக்கு வழங்கவில்லை. இங்கு வியாபாரம் செய்யும் யாரும், விஜயநகரை சேர்ந்தவர்கள் அல்ல. விதிமீறலாக கடைகளை பெற்றுள்ளனர். இனியும் இப்படியே நீடித்தால், திட்டமே வீணாகும்.
மார்க்கெட் எங்களுக்காக கட்டப்பட்டது. ஆனால் எங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். கடைகளை அதிகாரப்பூர்வமாக வழங்க, டெண்டர் அழைக்கப்படவில்லை.
எங்களில் யாருக்கும் கடைகள் கிடைக்கவில்லை. யார், யாரோ கடைகளை பெற்றுள்ளனர். கடைகளை பகிர்ந்தளிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு 'கிருஷ்ணதேவராய மாநகராட்சி பஜார்' இருப்பதே, மக்களுக்கு தெரியவில்லை. அறிவிப்பு பலகைகள் இல்லை. பஜார் முன் பகுதியில் ஒயிட் டாப்பிங் பணிகள் நடக்கின்றன. இதுவும் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வர, இடையூறாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.