/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பவுரிங் மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை
/
பவுரிங் மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை
ADDED : பிப் 27, 2026 05:25 AM

பெங்களூரு: பெங்களூரின் பிரசித்தி பெற்ற பவுரிங் மருத்துவமனையில், மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான மாத்திரைகள் கிடைப்பதில்லை.
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் மருத்துவமனை, நகரின் முக்கியமான அரசு மருத்துவமனைகளில் ஒன்று. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் வருகின்றனர்.
இத்தகைய மருத்துவமனையில், சில நாட்களாக மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, டாக்டர்கள் மருந்து எழுதி கொடுக்கின்றனர். இந்த மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகத்தில் இல்லாததால், நோயாளிகள் மருந்துக்காக அல்லல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏழை நோயாளிகள் அதிக பணம் கொடுத்து, வெளியில் உள்ள மருந்து கடைகளில் மருந்து வாங்குகின்றனர்.
ரத்த அழுத்தம், நீரிழிவு, வலி நிவாரணி மாத்திரைகளும், மருத்துவமனையில் இல்லை என, நோயாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பவுரிங் மருத்துவமனை அதிகாரி அரவிந்த் கூறுகையில், ''மருந்துகள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். அவசர அவசியம் கருதி, தேவையான மருந்துகளை வரவழைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் அனைத்து மருந்துகளும் கிடைக்கும்,'' என்றார்.

