தேவனஹள்ளி மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை
தேவனஹள்ளி மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை
ADDED : மே 13, 2026 11:58 PM

தேவனஹள்ளி: தேவனஹள்ளி மருத்துவமனையில், மருந்துகள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிப்படைகின்றனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர்.
காய்ச்சல், சளி, வாயு கோளாறு மாத்திரைகளை தவிர, முக்கியமான ஆன்டிபயோடிக் மாத்திரைகள் இல்லை. டாக்டர்கள் எழுதி கொடுக்கும் பல மருந்து, மாத்திரைகள் மருத்துவமனையின் பார்மசியில் இல்லை. வெளியே சென்று அதிக பணம் கொடுத்து வாங்குகின்றனர்.
ஆன்டிபயோடிக் ஊசிகளும் பற்றாக்குறையாக உள்ளன. இருக்கும் ஊசிகளை வைத்து, ஊழியர்கள் சூழ்நிலையை சமாளிக்கின்றனர். மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி, எக்ஸ்ரே ஷீட்களும் இல்லை. எக்ஸ்ரே எடுக்கும் நோயாளிகள், தங்கள் மொபைல் போனில் எக்ஸ்ரேவை போட்டோ எடுத்து செல்லும் சூழ்நிலை உள்ளது.
மருந்துகள் தேவையென சுகாதாரத்துறைக்கு வேண்டுகோள் விடுத்தும் வினியோகிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. வாக்குறுதி திட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, ஏழைகளின் சிகிச்சைக்கு மருந்துகள் வழங்குவதில் அரசு அளிக்கவில்லை என, பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
