சிறார்கள் மொபைல் பயன்படுத்த தடையா? கருத்து கேட்க அரசு திட்டம்
சிறார்கள் மொபைல் பயன்படுத்த தடையா? கருத்து கேட்க அரசு திட்டம்
ADDED : பிப் 28, 2026 06:07 AM
பெங்களூரு: ''கர்நாடகாவில், 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்படுத்த, தடை விதிப்பது குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும்,'' என, தொடக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிறார்கள் மொபைல் போன், சமூக வலை தளங்கள் பயன்படுத்துவதால், பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது, கர்நாடக பிரச்னை மட்டுமல்ல. இந்த நாட்டின் பிரச்னையாகும்.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், முதல்வர் சித்தராமையாவின் உத்தரவுபடி, 'மொபைல் போனை விடுங்கள், புத்தகத்தை கையில் எடுங்கள்' என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசிக்கிறது.
பிள்ளைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதே பெற்றோர் தான். மொபைல் போன், சமூக வலைதளங்களால் சிறார்கள் திசை மாறுகின்றனர்.
சிறார்கள், பெற்றோர் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டறிந்து, மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களுக்கு, தடை விதிப்பது குறித்து அரசு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
