ADDED : ஜூலை 07, 2025 03:14 AM

துமகூரு : ஹோட்டல் அறையில் எஸ்.ஐ., ஒருவர் தற்கொலை செய்து கொண்டது, நான்கு நாட்களுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்தது.
தாவணகெரே நகரின், லே - அவுட் போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் நாகராஜப்பா, 58. இவர் ஜூலை 1ம் தேதி காலை, துமகூரு நகருக்கு வந்தார்.
இங்குள்ள துவாரகா ஹோட்டலில், நான்காவது மாடியில் உள்ள அறையை வாடகைக்கு பெற்று தங்கினார்.
அவர் அறைக்கு சென்றதில் இருந்து, வெளியே வரவே இல்லை. ஹோட்டல் ஊழியர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. போன் செய்தும் எடுக்கவில்லை. ஓய்வில் இருக்க கூடும் என, ஊழியர்கள் நினைத்து மவுனமாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, நாகராஜப்பா தங்கியிருந்த அறைக்குள் இருந்து, துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், துமகூரு நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நாகராஜப்பா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
நான்கு நாட்களுக்கு முன்பே, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் அழுகி காணப்பட்டது. தற்கொலைக்கு முன், அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது.
அதில் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். உடலை மீட்ட போலீசார், அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்; வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.