/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தற்கொலைக்கு முயற்சித்தவர் மனதை மாற்றிய எஸ்.ஐ.,
/
தற்கொலைக்கு முயற்சித்தவர் மனதை மாற்றிய எஸ்.ஐ.,
ADDED : ஆக 28, 2025 11:07 PM
ஷிவமொக்கா: ஜோக் நீர்வீழ்ச்சியில் விழுந்து, தற்கொலைக்கு முயற்சித்த துணி வியாபாரியை, எஸ்.ஐ., காப்பாற்றி, ஊருக்கு அனுப்பினார்.
ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவின் ஜோக் நீர்வீழ்ச்சி அருகில் அடையாளம் தெரியாத நபர், நேற்று காலை, அபாயமான இடங்களை பற்றி, ஆட்டோ ஓட்டுநர்களிடம் தகவல் கேட்டார்.
இவரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமளித்ததால், ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., நாகராஜுக்கு தகவல் சென்றது. அவர் அங்கு வந்து, சந்தேகத்துக்கு காரணமான நபரிடம் விசாரணை நடத்தினார்.
பெங்களூரில் துணி வியாபாரம் செய்யும் அந்நபர், தொழிலில் நஷ்டம் அடைந்தார். லட்சக்கணக்கான ரூபாய் கடனாளியானார்.
அவரது பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லை. மற்றொரு பக்கம் பணக்கஷ்டம். இதனால் மனம் நொந்த அவர், 20 நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறினார்.
பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட கிடைத்த இடங்களில் தங்கினார். இறுதியாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ஷிவமொக்காவுக்கு வந்ததை விவரித்தார்.
அந்நபரை சமாதானம் செய்த எஸ்.ஐ., நாகராஜ், 'தற்கொலை செய்வது தவறானது' என, புத்திமதி கூறி மனதை மாற்றினார். அந்நபரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். அந்நபர் மனம் மாறி, பெங்களூருக்கு புறப்பட்டார்.