சித்தராமையாவே 5 ஆண்டும் முதல்வர் பரமேஸ்வர் பேட்டி
சித்தராமையாவே 5 ஆண்டும் முதல்வர் பரமேஸ்வர் பேட்டி
ADDED : ஏப் 07, 2026 05:27 AM

மைசூரு: ''சித்தராமையாவே ஐந்தாண்டும் முதல்வராக இருப்பார்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளிலும், காங்கிரஸ் வெற்றி பெறும். தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கான அறிகுறியாக இருக்காது. 2028ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னோடியும் இல்லை. பா.ஜ., தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், சித்தராமையாவே ஐந்து ஆண்டும் முதல்வராக இருப்பார். மாற்றத்தை ஏற்படுத்துவது மேலிடம் கையில் உள்ளது. சில எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பதவி விவகாரத்தில், தங்களது சொந்தக் கருத்துகளை கூறுகின்றனர். மாநிலத்தில் உள்ள, 224 எம்.எல்.ஏ.,க்களுக்கும் முதல்வராகும் தகுதி உள்ளது. ஆனால், அதற்கு முதல்வர் நாற்காலி காலியாக இருக்க வேண்டுமே.
சிவகுமார் எங்கள் கட்சியின் தலைவர்; துணை முதல்வராக உள்ளார். அவர் விஷயத்திலும் மேலிடம் முடிவு எடுக்கும். எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து, கள்ள சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் மீது உணவு துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்கின்றனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி. யாரும் காப்பாற்றும் பேச்சுக்கே இங்கு இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
