எம்.எல்.ஏ.,க்களுடன் சித்தராமையா ஆலோசனை எஸ்.ஐ.ஆர்., பணியில் கவனம் செலுத்த உத்தரவு
எம்.எல்.ஏ.,க்களுடன் சித்தராமையா ஆலோசனை எஸ்.ஐ.ஆர்., பணியில் கவனம் செலுத்த உத்தரவு
ADDED : மே 24, 2026 11:32 PM

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கும் போது, அதில் கவனம் செலுத்தும்படி உத்தரவிட்டு உள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் இறந்து போனவர்கள், வேறு இடங்களுக்கு சென்றவர்கள், போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்கி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்க்கும் வகையில், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
கர்நாடகா உட்பட 16 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் அடுத்த மாதம் 20 ம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளன. எஸ்.ஐ.ஆர்., பணியால் தங்கள் ஓட்டு பறிபோகுமா என்று, கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்க பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.
மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கலந்து கொண்டார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், ஒடிஷா மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., பணியின் போது, நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்து விவாதம் நடந்தது.
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆ ர்., பணி நடக்கும் போது, எந்த முறைகேடும் நடக்காமல் தடுக்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் தேவையின்றி நீக்கப்படுவதை தடுக்கவும் கவனம் செலுத்தும்படி, எம்.எல்.ஏ.,க்களுக்கு, சித்தராமையா உத்தரவி ட்டார்.
'மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்; பா.ஜ., தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தலாம்; கவனமாக இருங்கள்' என அறிவுரை வழங்கினார். பின், ஜி.பி.ஏ., தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறுகையில், 'தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, எஸ்.ஐ.ஆர் மூலம் தங்கள் இஷ்டத்திற்கு, வாக்காளர்கள் பெயர்களை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதுகுறித்து விவாதித்தோம்.
'கர்நாடகாவில் தேவையின்றி வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது தடுக்க முயற்சி செய்வோம். நியாயமான முறையில் எஸ்.ஐ.ஆர்., நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்' என்றனர்.
