/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசரா துவக்க விழா சோனியாவுக்கு சித்தராமையா அழைப்பு
/
மைசூரு தசரா துவக்க விழா சோனியாவுக்கு சித்தராமையா அழைப்பு
மைசூரு தசரா துவக்க விழா சோனியாவுக்கு சித்தராமையா அழைப்பு
மைசூரு தசரா துவக்க விழா சோனியாவுக்கு சித்தராமையா அழைப்பு
ADDED : ஆக 21, 2025 11:01 PM
மைசூரு: மைசூரு தசராவை துவக்கி வைக்க வரும்படி, காங்கிரஸ் எம்.பி., சோனியாவுக்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைசூரு தசராவை விமரிசையாக கொண்டாட, அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும், தசராவை, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் துவக்கி வைப்பது வழக்கம்.
பெங்களூரில் சமீபத்தில் நடந்த தசரா உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், இந்தாண்டு விழாவை துவக்கி வைக்க யாரை அழைப்பது என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம், முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., சோனியாவுக்கு, முதல்வர் சித்தராமையா, இரண்டு நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி உள்ளார். அதில், 'மைசூரு தசரா விழா செப்., 22ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை நடக்கிறது. செப்., 22ல் சாமுண்டி மலையில் நடக்கும் விழாவை, நீங்கள் துவக்கி வைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இக்கடிதத்துக்கு சோனியாவிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. விரைவில் புதுடில்லி செல்லும் சித்தராமையா, தனிப்பட்ட முறையில் சோனியாவை சந்தித்து, தசராவை துவக்கி வைக்க அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டடங்களில் தடை இந்நிலையில், மாவட்ட கலெக்டரும், தசரா சிறப்பு அதிகாரியுமான லட்சுமிகாந்த் ரெட்டி கூறியதாவது:
மைசூரு தசராவின் நிறைவு நாளான விஜயதசமி அன்று நடக்கும் ஜம்பு சவாரியை பார்க்க, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருவர்.
மைசூரு அரண்மனையில் இருந்து பன்னி மண்டபம் வரை நடக்கும் ஜம்பு சவாரியை பார்க்க, ராஜவீதியில் இரு பக்கமும் மக்கள் அதிகளவில் கூடுவர். இச்சாலையில் உள்ள லான்ஸ் டவுன் கட்டடம், தேவராஜா மார்க்கெட், கே.ஆர்., சதுக்கத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா கட்டடம், அரசு ஆயுர்வேத கல்லுாரி, சாயாஜி ராவ் சாலைகளில் பாரம்பரிய, பழமையான கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்களில் மக்கள் ஏறி, ஊர்வலத்தை பார்வையிடுவர்.
மக்களின் நலன் கருதி, இந்தாண்டு இக்கட்டடங்களில் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜயதசமி அன்று இக்கட்டடங்களில் மக்கள் ஏறாத வகையில், கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோன்று மரங்கள், உயரமான கண்காணிப்பு கோபுரங்களில் ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.