சிவகுமார் முதல்வர் ஆவார் என கூற மறுத்த சித்தராமையா ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் பற்றி சுவாரஸ்ய விவாதம்
சிவகுமார் முதல்வர் ஆவார் என கூற மறுத்த சித்தராமையா ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் பற்றி சுவாரஸ்ய விவாதம்
ADDED : மார் 26, 2026 12:51 AM
பெங்களூரு: ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யாதது ஏன் என்பது பற்றி சட்டசபையில், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் இடையில் சுவாரஸ்யமான விவாதம் நடந்தது. சிவகுமார் முதல்வர் ஆவார் என்று கூற, சித்தராமையா மறுத்து விட்டார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, முதல்வர் சித்தராமையா பேசும் போது, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குறுக்கிட்டு பேசுகையில், ''நீங்கள் மூடநம்பிக்கைக்கு எதிரானவர். எதற்காக இம்முறை ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை,'' என்றார்.
சித்தராமையா: ராகு காலத்தில் இம்முறை பட்ஜெட் தாக்கல் செய்யாதது உண்மை தான். எனது குடும்பத்தினர், அதிகாரிகள் கூறியதால், ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அவர்கள் பேச்சை கேட்க வேண்டுமா. இல்லா விட்டால் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமா.
அசோக்: முன்பு இருந்த நிலைமை வேறு. இப்போது இருக்கும் நிலைமை வேறு.
சித்தராமையா: என்னை பொறுத்த வரை ராகு, எமகண்டம் எல்லாம் ஒன்று தான். உகாதி, சிவராத்திரி அன்றும் நான் இறைச்சி சாப்பிடுகிறேன். நீங்கள் பண்டிகையாக பார்க்கிறீர்கள். நான் திருவிழாவாக பார்க்கிறேன்.
பா.ஜ., சுனில்குமார்: நீங்கள் முதல்வர் ஆன பின்தான் பட்டு துண்டு அணிகிறீர்கள். சிவகுமார் முதல்வர் பதவி கிடைக்கும் என்று சால்வை அணிய ஆரம்பித்து உள்ளார்.
சித்தராமையா: முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பே, நான் துண்டு அணிகிறேன். அப்போது சாதாரண துண்டு அணிந்திருந்தேன். இப்போது பட்டு துண்டு அணிகிறேன். அதுவும் விலை உயர்ந்தது.
சுனில்குமார்: நீங்கள் முதல்வராக தொடர வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.
சித்தராமையா: கட்சி மேலிடம் ஒப்பு கொண்டால், அடுத்து இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்வேன். எதிர்காலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.
அசோக்: அனைத்து கட்சி உறுப்பினர்களுடன், சபாநாயகர் காதர் குழு புகைப்படம் எடுத்தது சந்தேகமாக உள்ளது. விதான் சவுதாவுக்கு பதிய கதவுகள் பொருத்தி உள்ளார்.
சித்தராமையா: அவர் எங்கும் செல்ல மாட்டார். 2028ல் வெற்றி பெறுவார். கட்சி மேலிடம் முடிவு செய்யும் வரை, அவரே சபாநாயகராக இருப்பார். எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லையா. சுனில் குமாருக்கு இல்லையா. நீங்கள் முதல்வர் ஆனால் எனக்கு மகிழ்ச்சி தான். விஜயேந்திரா முதல்வர் பதவி மீது கண் வைத்து உள்ளார். நீங்கள் எல்லாம் உஷாராக இருக்க வேண்டும். (அவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது)
சுனில்குமார்: சிவகுமார் முதல்வர் ஆனாலும் மகிழ்ச்சி என்று சொல்லுங்கள்.
சித்தராமையா: இங்கு 224 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யார் முதல்வர் ஆனாலும் மகிழ்ச்சி தான். அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், சிவானந்த பாட்டீல், முனியப்பா, ஈஸ்வர் கன்ட்ரே, எம்.எல்.ஏ., கோன ரெட்டி ஏன் முதல்வர் ஆக கூடாது. எல்லாரும் திறமையானவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
