/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா, சிவகுமார் இடையிலான கோஷ்டிபூசல்... பகிரங்கம்! ராகுலின் பீஹார் யாத்திரையில் தனித்தனியாக பங்கேற்பு
/
சித்தராமையா, சிவகுமார் இடையிலான கோஷ்டிபூசல்... பகிரங்கம்! ராகுலின் பீஹார் யாத்திரையில் தனித்தனியாக பங்கேற்பு
சித்தராமையா, சிவகுமார் இடையிலான கோஷ்டிபூசல்... பகிரங்கம்! ராகுலின் பீஹார் யாத்திரையில் தனித்தனியாக பங்கேற்பு
சித்தராமையா, சிவகுமார் இடையிலான கோஷ்டிபூசல்... பகிரங்கம்! ராகுலின் பீஹார் யாத்திரையில் தனித்தனியாக பங்கேற்பு
ADDED : ஆக 31, 2025 11:23 PM

கர்நாடகாவில் சமீப நாட்களாக, முதல்வர் பதவியை முன்வைத்து பல விவாதங்கள் நடக்கின்றன. நடப்பாண்டு இறுதியில் முதல்வர் மாற்றப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார் என, சில அமைச்சர்கள் கூறினர். இதை முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள் மறுத்தனர். முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஆட்சி காலம் முடியும் வரை, சித்தராமையா பதவியில் நீடிப்பார் என, கருத்து தெரிவித்தனர்.
அரசுக்கு இரண்டரை ஆண்டு நிறைவடைந்த பின், முதல்வர் பதவி கிடைக்கும் என, துணை முதல்வர் ஆர்வமாக காத்திருக்கிறார். ஆனால் இவரது ஆசைக்கு, முதல்வர் சித்தராமையா முட்டுக்கட்டை போடுகிறார். முதல்வர் மாற்றம் இல்லை என, பகிரங்கமாகவே கூறி வருகிறார். இதனால் சிவகுமாரும், அவரது ஆதரவாளர்களும் எரிச்சல் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே சிவகுமாருக்கு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இல்லையென, சித்தராமையா மறைமுகமாக கூறியது, சிவகுமாரை சீண்டியுள்ளது. தனக்கும் அதிக எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது என்பதை காட்ட முயற்சிக்கிறார். எனவே, அவ்வப்போது எம்.எல்.ஏ.,,க்களை சந்திக்கிறார். தொகுதி பிரச்னைகளை கேட்டறிகிறார்.
இதன் பயனாக, சித்தராமையா கோஷ்டியில் இருந்த சில எம்.எல்.ஏ.,க்கள், இப்போது சிவகுமார் கோஷ்டிக்கு மாறியுள்ளனர். அதே போன்று சித்தராமையாவும் தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
காங்கிரஸ் மேலிடத்துக்கு, தங்களின் பலத்தை காட்ட, இருவரும் முயற்சிக்கின்றனர். பா.ஜ., மீது ஓட்டு திருட்டு குற்றம் சாட்டி, பெங்களூரின் சுதந்திர பூங்காவில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில், போராட்டம் நடந்தது. இதில் அதிகமான தொண்டர்களை சேர்ப்பதில், சித்தராமையா, சிவகுமார் இடையே பெரும் போட்டியே ஏற்பட்டது.
பீஹாரில் தான் நடத்தும் வாக்காளர் அதிகார யாத்திரையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என, ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பீஹாரில் சில நாட்களுக்கு முன் நடந்த, வாக்காளர் அதிகார யாத்திரையில் சிவகுமாரும், சித்தராமையாவும் தனித்தனியாகவே பங்கேற்றனர். ராகுல் முன் தங்களின் பலத்தை காண்பிக்க, இருவரும் முற்பட்டனர்.
இதன்படி, சட்டசபை தலைமை கொறடா அசோக் பட்டன் உட்பட, காங்கிரசின் 11 எம்.எல்.ஏ.,க்களை சிறப்பு விமானத்தில், பீஹாருக்கு சிவகுமார் அழைத்து சென்றார். இதன் மூலம் தனக்கும், எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளது என்பதை உணர்த்தினார்.
அவரை தொடர்ந்து சித்தராமையா, தானும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, ஜமீர் அகமது கான், சுதாகர், மேல்சபை காங்., தலைமை கொறடா சலீம் அகமது உட்பட, பலரை பீஹாருக்கு விமானத்தில் அழைத்து சென்றார்.
மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத்தும், சித்தராமையாவுடன் இருந்தார். ஹரிபிரசாத் பல முறை, முதல்வரை கடுமையாக விமர்சித்தவர். இப்போது இருவரும் சமரசம் செய்து கொண்டாக கூறப்படுகிறது.
கர்நாடக காங்கிரசில் பல நாட்களாக கோஷ்டி பூசல் இருந்தும், அதை முதல்வரோ, துணை முதல்வரோ வெளிக்காட்டவில்லை. தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒருங்கிணைப்பு இருப்பதாக, பூசி மெழுகினர்.
ஆனால் பீஹாரில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்க, சேர்ந்து செல்லாமல் தங்களின் ஆதரவு படையுடன் தனித்தனியாக சென்றனர். இதன் மூலம் கட்சியில் கோஷ்டி பூசல் உள்ளதை அம்பலப்படுத்தியுள்ளனர்.
பீஹார் பயணத்தை அடுத்து கர்நாடக காங்கிரசில், மாற்றங்கள் தென்படுகின்றன. இதுவரை சித்தராமையா கோஷ்டியில் இருந்த, முன்னாள் எம்.பி., உக்ரப்பா, இப்போது சிவகுமாருடன் சேர்ந்துள்ளார்.
இதேபோன்று இவருக்கு ஆதரவாக இருந்த சிலர், எதிர் கோஷ்டியில் ஐக்கியமாகியுள்ளனர்.
தற்போதைக்கு எந்த கோஷ்டியிலும் சேராமல், நடுநிலையாக உள்ள சிலர், நடப்பாண்டு இறுதியில் முதல்வர் மாற்றம் நிகழும் என, எதிர்பார்க்கின்றனர். யார் முதல்வராகிறாரோ, அவரது கோஷ்டியில் சேர்ந்து கொள்ள காத்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.