சித்தராமையா வீடியோ வழக்கில் திருப்பம் காங்., கிருபா ஆல்வா பற்றி அதிர்ச்சி தகவல்
சித்தராமையா வீடியோ வழக்கில் திருப்பம் காங்., கிருபா ஆல்வா பற்றி அதிர்ச்சி தகவல்
UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 09:36 PM

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையா தொடர்பான வீடியோ வெளியான வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்த பெண்ணை பயன்படுத்தி, காங்கிரசின் கிருபா ஆல்வா, முன்னாள் முதல்வர் குறித்து அவதுாறாக பேசி வீடியோ எடுத்தது அம்பலமாகி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா பற்றி, பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியான வழக்கை, பெங்களூரு சி.சி.பி., போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில், தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் கிருபா ஆல்வாவுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
வெளிநாடு தப்பி சென்ற அவருக்கு, தற்போது முன்ஜாமின் கிடைத்துள்ளது. கர்நாடகாவுக்கு திரும்பும் அவர் விசாரணைக்கு ஆஜராகும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், சி.சி.பி., போலீசார் விசாரணையில், கிருபா ஆல்வா பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, கடந்த 2013 முதல், 2018 வரை காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்தார். அப்போது குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவியாக கிருபா ஆல்வா பணியாற்றினார்.
அப்போது, 2016 காலகட்டத்தில் தட்சிண கன்னடா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், தனக்கு சிலர் பாலியல் தொல்லை அளிப்பதாக மின்னஞ்சல் மூலம், கிருபா ஆல்வாவுக்கு புகார் அளித்திருந்தார். அந்த புகாரை போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், ஆல்வா அழித்து விட்டார்.
புகாருக்கு எந்த பதிலும் வராததாலும், புகார் அளித்த சிறுமியும் அமைதியாகி விட்டார். அந்த சிறுமிக்கு திருமணம் முடிந்து கேரளாவில் வசிக்கிறார். அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், புகார் அளித்த பெண்ணை தேடி, 2023ல் கேரளாவுக்கு சென்ற கிருபா ஆல்வா, சித்தராமையா பற்றி பேச அந்த பெண்ணிடம், ‘டீலிங்’ பேசியுள்ளார். பின், தன் ஆதரவாளர்கள் மூலம் சித்தராமையாவை பற்றி, அந்த பெண்ணை பேச வைத்து வீடியோ எடுத்தது அம்பலமாகி உள்ளது.
கடந்த, 2023 தேர்தலில் தட்சிண கன்னடாவின் புத்துார் தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் சீட் பெற கிருபா ஆல்வா நினைத்தார். ஆனால் அசோக்குமார் ராய்க்கு சீட் கிடைத்தது. அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
புத்துாரில் தனக்கு சீட் கிடைக்காத பட்சத்தில், வீடியோவை வெளியிடவும் கிருபா ஆல்வா தயாராக இருந்தார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
