வளர்ச்சி பணிகளில் அலட்சியம் கூடாது அதிகாரிகளுக்கு சித்தராமையா எச்சரிக்கை
வளர்ச்சி பணிகளில் அலட்சியம் கூடாது அதிகாரிகளுக்கு சித்தராமையா எச்சரிக்கை
ADDED : மே 03, 2026 03:41 AM

பெங்களூரு: ''வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது, தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
சமீப நாட்களாக முதல்வர் மாற்றம், அமைச்சரவை மாற்றம் என, பல குழப்பங்களால் அரசு இயந்திரம் முடங்கியுள்ளது. முதல்வர் மாறுவார் என்ற விவாதங்கள் நடப்பதால், அதிகாரிகளின் சுறுசுறுப்பு குறைந்துள்ளது.
பணியில் அலட்சியம் காட்டுவதாகவும் கூறப்பட்டது. வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
'மாநிலத்தில் பதவி நாற்காலிக்கு சண்டை நடப்பதால், ஆட்சி நிர்வாகம் பாதிப்படைந்துள்ளது' என, எதிர்க்கட்சி தலைவர்களும் வசைபாடுகின்றனர். முதல்வர் பதவி பறிபோகுமோ என்ற பீதியில் காலம் கடத்தியதால், சித்தராமையாவாலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடியவில்லை.
தற்போதைக்கு முதல்வர் மாற்றம் இல்லை என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய பின், ஓரளவு நிம்மதி அடைந்துள்ள முதல்வர் சித்தராமையா, ஆட்சி இயந்திரத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறார்.
பெங்களூரு விதான் சவுதாவின் மாநாட்டு ஹாலில், பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா நேற்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் அந்தந்த துறைகளின் தலைமை செயலர்கள், பொதுச்செயலர்கள், இயக்குநர்கள் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள், வளர்ச்சிபணிகளை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டக்கூடாது. ஒருவேளை அலட்சியம் காட்டினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
நடப்பாண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை, விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தாமதம் காட்டக் கூடாது. கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், சில திட்டங்களை செயல்படுத்தவில்லை. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.
நிதி பற்றாக்குறையை காரணம் காட்டக்கூடாது. ஏன் என்றால் நிதி நிர்ணயித்த பின்னரே, திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகின்றன.
புதிய திட்டங்கள் அல்லது திடீரென அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு தான், நிதி பற்றாக்குறை பிரச்னை ஏற்படும். உயர் அதிகாரிகள் தேவையற்ற காரணங்களை கூறி, காலம் கடத்துவதை விட்டு விட்டு, மக்களுக்கு அரசின் சலுகைகளை கிடைக்க செய்யுங்கள்.
சில துறைகளில் ஊழல் மற்றும் இடைத்தரகர்களின் தொல்லை அதிகரிப்பதாக புகார்கள் வந்துள்ளன. சில அதிகாரிகள் அலுவலகத்துக்கு வராமல் வேறு இடத்தில் அமர்ந்து, கோப்புகளை பரிசீலிப்பதும் என் கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் என்னால் சகிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
