காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வந்த சித்தராமையாவின் பல்லாரி பாதயாத்திரை
காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வந்த சித்தராமையாவின் பல்லாரி பாதயாத்திரை
ADDED : மே 29, 2026 12:41 AM

- நமது நிருபர் -
கர்நாடகா மைசூரு மாகாணமாக இருந்த போது, கடந்த 1952 ல் முதல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது இருந்து 1972 வரை நடந்த 5 தேர்தலிலும் காங்கிரஸ், காங்கிரஸ் ஓ பிரிவு, காங்கிரஸ் ஆர் பிரிவு ஆட்சிக்கு வந்தது.
மைசூரு மாகாணம் கர்நாடகா என்று மாற்றப்பட்ட பின், 1972 ல் நடந்த தேர்தலில் காங்கிஸ் ஆர் பிரிவு வென்றது. 1978 ல் நடந்த தேர்தலிலும் காங்கிரசை ஆட்சியை பிடித்தது.
ஆனால் 1983, 1985ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சி, முதல்முறையாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து அசத்தியது. 1989 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர, 1994 தேர்தலில் ம.ஜ.த., முதல் முறையாக ஆட்சியை பிடித்து வரலாறு படைத்தது.
பின், 1999 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர, 2004 தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., ஆட்சியை பிடித்தது. 2008 தேர்தலில் பா.ஜ., முதல் முறையாக தனித்து ஆட்சியை பிடித்து ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் அவர்களால் நிலையாக ஆட்சி செய்ய முடியவில்லை. ஊழல் வழக்கில் எடியூரப்பா சிறைக்கு சென்றார். சட்டவிரோத கனிம சுரங்க கடத்தல் கொடிகட்டி பறந்தது. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோர் சிக்கினர். அந்த நேரத்தில் சட்டசபையில் நடந்த சம்பவம் தான், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர காரணமாக இருந்தது.
சட்ட விரோத கனிம சுரங்க முறைகேடு குறித்து, சட்டசபையில் விவாதம் நடந்த போது, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையாவை பார்த்து, முடிந்தால் பல்லாரிக்கு வந்து பார் என்று சவால் விட்டார்.
இந்த சவாலை ஏற்ற சித்தராமையா, நான் பல்லாரி வருகிறேன்; முடிந்தால் தடுத்து பார் என்று, தனது கையில் தட்டி ஆவேசமாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
சொன்னதுடன் நிற்காமல் பெங்களூரில் இருந்து 308 கி.மீ.,யில் உள்ள, பல்லாரி வரை சித்தராமையா பாதயாத்திரை சென்றார். அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவை கண்டு, காங்கிரஸ் மேலிடமே ஆச்சரியப்பட்டது.
இந்த பாதயாத்திரையின் பலனாக, 2013 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், 122 இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்தது. இந்த பாதயாத்திரை கர்நாடக அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்றாக பதிவாகி உள்ளது.
