சித்தராமையா பழைய புலி மத்தியமைச்சர் ஷோபா கருத்து
சித்தராமையா பழைய புலி மத்தியமைச்சர் ஷோபா கருத்து
ADDED : மே 28, 2026 03:08 AM

பெங்களூரு: ' ' முதல்வர் சித்தராமையா பழைய புலி. எப்போது என்ன ஆட்டத்தை வேண்டுமானாலும் ஆடுவார், ' ' என, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா பழைய புலி. எப்போது என்ன ஆட்டம் ஆடுவார் என்பது, யாருக்கும் தெரியாது. அவர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக, ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ராஜினாமா செய்யும் வரை, அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது அவரது கட்சியின் தனிப்பட்ட விஷயம். இதில், பா.ஜ., வினர் பேச, எதுவும் இல்லை.
தங்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதால், மாநில மக்கள் காங்கிரசிடம் ஆட்சியை கொடுத்தனர். அதன்படி, மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஆனால் பணியை மறந்து விட்டு, நாற்காலிக்காக முட்டி மோதுகின்றனர்.
முதல்வராக வேண்டும், அமைச்சராக வேண்டும் என, காங்கிரசில் பலர் மோதுகின்றனர். இனியாவது இதை விட்டு, மக்களின் பிரச்னைகளில் அக்கறை காட்டுங்கள் என, நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அரசு அமைந்த மூன்று ஆண்டுகளில், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் மாற்றம் சர்ச்சையில் வீணாகி விட்டது.
காங்கிரஸ் அரசுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை. ஒரு பக்கம் வறட்சி, மற்றொரு பக்கம் அதிக மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
பெங்களூரு நகரம் மழையில் மூழ்குகிறது. ஆனால் அரசில் உள்ளவர்கள், பதவிக்காக போராடுகின்றனர். தன் நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள, சித்தராமையா முயற்சிக்கிறார். சிவகுமார் முதல்வராக முயற்சிக்கிறார்.
எந்த அமைச்சரும், மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்கவில்லை. வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
