அஹிந்தா சமூகத்தின் தலைவர்களுக்கு சித்தராமையா வழிகாட்டுதல் அவசியம்
அஹிந்தா சமூகத்தின் தலைவர்களுக்கு சித்தராமையா வழிகாட்டுதல் அவசியம்
ADDED : மே 30, 2026 02:25 AM

பெங்களூரு: ''சித்தராமையாவின் வழிகாட்டுதலின் கீழ், அஹிந்தா சமூக தலைவராக இருக்க வேண்டும். அதற்கு நான், தயாராக உள்ளேன்,'' என, சதீஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கட்சி மேலிடம் செய்துள்ள ஒப்பந்தபடி, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்து உள்ளார். தலைமை பிரச்னை குறித்த பேச்சு டில்லியில் தான் நடந்தது. தலைமை மாற்றம் குறித்து யாரும் எங்களிடம் கேட்கவில்லை.
வரும், 2028 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால், அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஓட்டுகளை ஒருங்கிணைப்பது அவசியம். அந்த சமூகத்தில், 500க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. சித்தராமையாவின் வழிகாட்டுதல் கீழ், அஹிந்தா சமூக தலைவராக இருக்க வேண்டும். அதற்கு நான் தயாராக உள்ளேன்.
சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, 37 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்து போட்டதாக, சில சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகின்றன.
கட்சி மேலிடம் சொல்வதை கேட்பேன் என்று கூறிய சித்தராமையா, அதன் படியே நடந்து உள்ளார். ராகுல் கூறிய இரண்டு நாட்களில் ராஜினாமா செய்து விட்டார்.
எனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்குவது குறித்து சித்தராமையா, சிவகுமார், கட்சி மேலிடம் முடிவு எடுப்பர். அரசியலில் இருக்கும் அனைவராலும் முதல்வர் ஆக விட முடியாது. அதற்கு நேரம், காலம் கணிந்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
