தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆடு மேய்த்தது முதல் முதல்வர் அரியணை வரை சித்தராமையா கடந்து வந்த சுவாரஸ்யமான பாதை

 ஆடு மேய்த்தது முதல் முதல்வர் அரியணை வரை சித்தராமையா கடந்து வந்த சுவாரஸ்யமான பாதை

 ஆடு மேய்த்தது முதல் முதல்வர் அரியணை வரை சித்தராமையா கடந்து வந்த சுவாரஸ்யமான பாதை


ADDED : மே 29, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சித்தராமையாவின் சொந்த ஊர் மைசூரு மாவட்டம் வருணா தாலுகாவில் உள்ள சித்தராமையனஹுண்டி கிராமம். இவரது பெற்றோர் சித்தராமே கவுடா - போரம்மா. ஆடு மேய்ப்பதை தொழிலாக கொண்ட குருபர் சமூகத்தில் பிறந்தவர் தான் சித்தராமையா.

சிறு வயதில் படிப்பு மீது ஆர்வம் இல்லாததால், குல தொழிலான ஆடு மேய்ப்பதை செய்தார். ஒரு கட்டத்தில் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட பள்ளிக்கு சென்றார். அதுவும் நேரடியாக நான்காம் வகுப்புக்கு.

பள்ளி படிப்பை முடித்த பின், கல்லுாரிக்கு சென்று பி.எஸ்சி., முடித்த அவருக்கு, வக்கீல் தொழில் மீது ஈர்ப்பு ஏற்பட மைசூரு பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.,யும் படித்தார்.

மைசூரு நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றிய போது அவரது குருவான நஞ்சுண்டசாமி தான், சித்தராமையாவுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டவர். கடந்த, 1978ல் முதல் முறையாக மைசூரு தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார்.

நிதியமைச்சர்

கடந்த, 1980ல் நடந்த லோக்சபா தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் மைசூரு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அந்த கட்சியில் இருந்து விலகி, பாரதிய லோக்தள் கட்சி சார்பில், 1983 சட்டசபை தேர்தலில், மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், கர்நாடக சட்டசபைக்கு அடியெடுத்து வைத்தார்.

சில நாட்களிலேயே, அப்போது ஆட்சியில் இருந்த ஜனதா கட்சியில் இணைந்து, கன்னட பாதுகாப்பு சமிதியின் தலைவரும் ஆனார்.

1985ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று, ராமகிருஷ்ண ஹெக்டேயின் அமைச்சரவையில் கால்நடை, போக்குவரத்து துறைகளின் அமைச்சர் ஆனார்.

ஜனதா கட்சி ம.ஜ.த.,வாக மாறிய பின், தேவ கவுடாவுடன், சித்தராமையாவுக்கு நெருக்கம் அதிகரித்தது. சித்தராமையாவை நிதியமைச்சராக்கி தேவ கவுடா அழகு பார்த்தார். கடந்த, 2004 தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக பதவியேற்றார்.



அரசியல் உதயம்

எல்லாம் நன்றாகவே சென்று கொண்டு இருந்த நேரத்தில், ஹுப்பள்ளியில் அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூக மாநாட்டை, கட்சியின் அனுமதியின்றி நடத்தியதால், சித்தராமையாவை கட்சியில் இருந்து நீக்கி தேவ கவுடா உத்தரவிட்டார். அவ்வளவு தான் சித்தராமையாவின் அரசியல் அத்தியாயம் முடிந்து விட்டது என்று பலரும் பேசிய வேளையில், அங்கிருந்து தான் ஆரம்பித்தது அவரது அரசியல் வாழ்க்கையின் உதயம்.

சோனியா முன்னிலையில் காங்கிரசில் இணைந்த சித்தராமையாவுக்கு, கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2008ல் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, சித்தராமையா எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

தனது சிறப்பான பேச்சுகளால் ஆளுங்கட்சியை கட்டி போட்டு, 2013ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததால், கட்சியின் மூத்த தலைவர்கள் இருந்தாலும் சித்தராமையாவை முதல்வர் ஆக்கியது காங்கிரஸ்.

ஐந்து ஆண்டுகளும் முழுமையாக பதவி காலத்தை நிறைவு செய்தார். 2018 தேர்தலில் கட்சி தோற்றாலும், சித்தராமையாவை எதிர்க்கட்சி தலைவர் ஆக்கினர். மீண்டும், 2023 தேர்தலில் வெற்றி பெற்ற பின், சிவகுமாருக்கு பதிலாக சித்தராமையாவே முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தலில் 2 முறை போட்டியிட்ட சித்தராமையா, இரு முறையும் தோற்று போனார். சட்டசபைக்கு, 14 முறை போட்டியிட்டு, மூன்று முறை தோற்று, 11 முறை வெற்றி பெற்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us