/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்!
/
11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்!
11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்!
11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்!
ADDED : ஜூன் 11, 2025 08:16 AM

ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில், கடந்த 4ம் தேதி பெங்களூரு விதான் சவுதா, சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி தேவி, 29 உட்பட 11 பேர் இறந்தனர். இதுகுறித்து சி.ஐ.டி., விசாரணை நடத்துகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் நீதி விசாரணைக்கும்; பெங்களூரு கலெக்டர் ஜெகதீஷ் தலைமையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு, அரசின் அலட்சியம் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் கேட்கின்றன.
நீதி விசாரணை
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இருவரும், நேற்று காலை பெங்களூரில் இருந்து ஒரே விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றனர். கட்சியின் தேசிய பொதுச் செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்து பேசினர்.
பின், கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை டில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சந்தித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த சம்பவம் போலீசார் அலட்சியத்தால் தான் நடந்தது என்றும், அலட்சியமாக செயல்பட்ட போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர், டி.சி.பி., - ஏ.சி.பி., இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யை இடமாற்றம் செய்திருப்பதாகவும் சித்தராமையாவும், சிவகுமாரும் எடுத்து கூறினர்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது பற்றியும் கூறினர்.
சம்பவம் குறித்து, நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தனது அரசியல் செயலராக இருந்த கோவிந்தராஜ் நீக்கப்பட்டு உள்ளார் என்றும் சித்தராமையா விளக்கம் தந்துள்ளார்.
ஹரிபிரசாத்
இவற்றை எல்லாம் பொறுமையாக கேட்ட ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், 'விதான் சவுதா முன்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தது யார். ஒரே நாளில் இரண்டு இடத்தில் நிகழ்ச்சி நடத்தினால், என்ன பிரச்னை வரும் என்று தெரியாதா' என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
பின், 'இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது. இனிமேல் முன்னெச்சரிக்கையாக இருங்கள்' என்றும் எச்சரித்து உள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுங்கள் என்றும் கூறி உள்ளனர்.
'நிகழ்ச்சி, விழாக்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்' என்று சித்தராமையா கூறி உள்ளார்.
இதையடுத்து, அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்தும் பேச்சு நடந்துள்ளது. சிறப்பாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது பற்றியும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
தலைவர் பதவி
அமைச்சரவை மாற்றம் நடந்தால் 8 முதல் 10 அமைச்சர்கள் பதவி பறிக்கப்படுவது உறுதி என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹரிபிரசாத், தேஷ்பாண்டேயை அமைச்சரவையில் சேர்த்து கொள்வது பற்றியும், முதல்வர் வசம் இருக்கும் சில முக்கிய துறைகளை, மூத்த அமைச்சர்களுக்கு வழங்குவது பற்றியும் ஆலோசித்து உள்ளனர்.
துணை முதல்வராக இருக்கும் சிவகுமாரிடம், நீர்பாசனம், பெங்களூரு நகர பொறுப்பு அமைச்சர் என்ற முக்கிய பதவிகள் உள்ளன. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.
இதனால், அவரது பணி சுமையை குறைக்கும் வகையில், வேறு ஒருவருக்கு தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு உள்ளது.
புதிய தலைவர் பதவிக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைவர் மாற்றம் பேச்சுக்கு இடையில், சதீஷ் ஜார்கிஹோளி நேற்று மதியம் திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த அறிக்கைக்கு சில சங்கங்கள், ஜாதி தலைவர்கள், மடாதிபதிகள், அமைச்சர்கள் ஆட்சேபனை தெரிவித்து பற்றி, ராகுலிடம் எடுத்து கூறினேன்.
அவர், 'ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள்' என்று கூறினார். இதை நாங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளோம். அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிப்போம். 90 நாட்களுக்குள் கணக்கெடுப்பு முடித்து அறிக்கையை வாங்க நடவடிக்கை எடுப்போம்.
- சித்தராமையா,
முதல்வர்