ADDED : மே 29, 2026 12:18 AM
- நமது நிருபர் -:
டில்லிக்கு தனி விமானத்தில் சித்தராமையா புறப்பட்ட விமானம், மோசமான வானிலை காரணமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அவசரமாக இறங்கியது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், அடுத்த அமைச்சரவை அமைப்பு குறித்து விவாதிக்க, நேற்று மாலை சித்தரா மையா, அவரது மகன் யதீந்திரா, மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அமைச்சர்கள் ஜார்ஜ், பைரதி சுரேஷ், சட்ட ஆலோசகர் பொன்னன்னா, காங்கிரஸ் செயலர் அபிஷேக் தத் ஆகியோர் சிறப்பு விமானம் மூலம் டில்லி புறப்பட்டனர்.
விமானம் புறப்பட்டு டில்லியை நெருங்கும் போது மோசமான வானிலை காரணமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கியது. அனைவரும் பத்திரமாக உள்ளதாக, முதல்வர் அலுவலகம் அறிவித்து உள்ளது.
இதுபோன்று, துணை முதல்வர் சிவகுமாரும், சிறப்பு விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டார். மாநிலத்தின் புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் தலைவரை தேர்வு செய்வது குறித்தும், அமைச்சர்கள், கட்சியின் செயல்பாடு, மாநில தலைவர் பதவி உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தலைவராக யாரை தேர்வு செய்கிறார்களோ, அவரே மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
