‘வெளிநாடு நிதி பெறும் கரப்பான் கட்சி ஊடுருவலை தடுக்கவே எஸ்.ஐ.ஆர்.,’
‘வெளிநாடு நிதி பெறும் கரப்பான் கட்சி ஊடுருவலை தடுக்கவே எஸ்.ஐ.ஆர்.,’
UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 10:36 PM

பெங்களூரு: ‘‘வெளிநாடுகளில் இருந்து கரப்பான் பூச்சி கட்சியினர் நிதியுதவி பெறுவதாகவும், சட்ட விரோத ஊடுருவலை தடுக்கவே எஸ்.ஐ.ஆர்., கொண்டு வரப்பட்டுள்ளது,’’ என்றும், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் மூலம், நாடு முழுதும் 13 கோடி வாக்காளர்கள் பெயர்களை நீக்கியதாக, காங்கிரஸ் கூறுவது பொய். ஊர் மாறி சென்றதால், 6 கோடியே 3 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
ஒரே வாக்காளருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு இருப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் 3 கோடி பேர் இறந்துவிட்டனர். ஒரு கோடி பேரின் பெயர்கள் இரண்டு இடங்களில் இருந்ததால் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தவறில்லை. கர்நாடகாவிலும், 7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு இடங்களில் பதிவாகி இருந்தன.
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நமது நாட்டிற்குள் மற்ற நாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவதை தடுக்கவும், எஸ்.ஐ.ஆர்., தேவை. தேர்தலில் பல ஆண்டுகளாக மோசடி நடந்தது. இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், நாடு முழுதும், 2.50 கோடி இளம் வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மக்களும், இளைஞர்களும் விழிப்புடன் உள்ளனர். தெருக்களில் நடக்கும் போராட்டம், கோஷங்களால் அரசை மாற்றுவது சாத்தியமில்லை.
நமது நாட்டிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில், சில தேச விரோதிகள் செயல்படுகின்றனர். கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே அமெரிக்காவில் இருந்தும், அஷுதோஷ் ரங்கா பாகிஸ்தானில் இருந்தும் நிதியுதவி பெறுகின்றனர். அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
