ADDED : மார் 29, 2025 06:59 AM
சிக்கமகளூரு : வரதட்சணை கொடுமை காரணமாக தங்கை கொலை செய்யப்பட்டதாக போலீசில் அண்ணன் புகார் அளித்துள்ளார்.
சிக்கமகளூரு, என்.ஆர்., புரா தாலுகாவை சேர்ந்தவர் மம்தா, 28. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவினாஷ், 32, என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது, 110 கிராம் தங்க நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணத்திற்கு பின்னர், மனைவி மம்தாவிடம் வரதட்சணையாக பணம் கேட்டு, கணவர் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மம்தா, தன் அம்மா வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன் பின், ஊர் பஞ்சாயத்தில் சமாதானம் பேசப்பட்டு ஒன்றாக வாழ துவங்கினர். ஜன., 25ம் தேதி மம்தா, துாக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி, கணவர் மருத்துவமனையில் சேர்த்தார்.
சில நாட்களுக்கு முன்பு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று மம்தா உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனதாக கணவர் கூறி உள்ளார்.
அவர் உடல்நிலை சரியில்லாமல் இறக்கவில்லை; வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டுள்ளார் என, கணவர், அவரது குடும்பத்தினர் மீது பலேஹொன்னுார் போலீஸ் நிலையத்தில் மம்தாவின் அண்ணன் மஞ்சுநாத் புகார் செய்துள்ளார்.