தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., மீண்டும் விசாரணை அப்ரூவர் ஆனவரை அழைத்து சென்று சோதனை
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., மீண்டும் விசாரணை அப்ரூவர் ஆனவரை அழைத்து சென்று சோதனை
ADDED : மே 22, 2026 05:20 AM

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை மீண்டும் துவங்கி உள்ளது. வழக்கில் அப்ரூவர் ஆனவரை அழைத்து சென்று, போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்தேன் என்று, மஞ்சு நாதா கோவில் முன்னாள் ஊழியர் சின்னையா என்பவர், மண்டை ஓட்டுடன் சென்று, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6 ம் தேதி, தர்மஸ்தலா போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
சின்னையா அடையாளம் காட்டிய, 20 இடங்களில் பள்ளம் தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை.
மஞ்சுநாதா கோவில், கோவிலின் நிர்வாக அதிகாரி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, சின்னையா பொய் புகார் அளித்தது தெரிந்தது.
இந்த வழக்கில் சின்னையா, ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரனே வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டண்ணவர், விட்டல் கவுடா உட்பட ஆறு பேர் மீது, கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி 3,900 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
போலீசில் புகார் அளிக்கும் போது, சின்னையா எடுத்து சென்ற மண்டை ஓட்டை, பங்களாகுட்டா வனப்பகுதியில் இருந்து விட்டல் கவுடா எடுத்து கொடுத்தது தெரிந்தது.
மண்டை ஓட்டை விட்டல் கவுடா எடுப்பதை, அவரது கார் டிரைவர் பிரதீப் மொபைல் போனில் வீடியோ எடுத்து இருந்தார். இந்த வீடியோ விசாரணை குழு கையில் சிக்கியது.
பிரதீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர் அப்ரூவராக மாறினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், வழக்கு விசாரணை நடக்காமல் அப்படியே இருந்தது.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பின், எஸ்.ஐ.டி., மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளது. மண்டை ஓடு எடுக்கப்பட்ட பங்களாகுட்டா வனப்பகுதிக்கு நேற்று பிரதீப்பை அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
போலீசாருடன், தடய அறிவியல் ஆய்வக ஊழியர்கள், சோகோ குழுவினரும் சென்றனர்.
அவர்கள் அங்கு ஏதாவது தடயம் சிக்குகிறதா என்று ஆய்வு செய்தனர். இரண்டு மணி நேரம் நடந்த சோதனைக்கு பின், பிரதீப் அனுப்பி வைக்கப்பட்டார்.
சோதனையின் போது எதுவும் சிக்கியதா என்பது குறித்த தகவல் இல்லை.
