/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி.,க்கு முழு சுதந்திரம்'
/
'தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி.,க்கு முழு சுதந்திரம்'
'தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி.,க்கு முழு சுதந்திரம்'
'தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி.,க்கு முழு சுதந்திரம்'
ADDED : ஆக 04, 2025 05:24 AM

பெங்களூரு: ''தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், கொலை செய்யப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக புகார் கூறியவர், வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் 13 இடத்தை அடையாளம் காட்டினார்.
எதுவும் சிக்கவில்லை அங்கு, 'மார்க்கிங்' செய்யப்பட்டு, கடந்த 29ம் தேதி முதல் பள்ளம் தோண்டும் பணிகள் நடந்தன. நேற்று முன்தினம் வரை 10 இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது.
இதில் ஆறாவது இடத்தில் இருந்து மட்டும் 12 எலும்பு கூடுகள், ஒரு மண்டை ஓடு கிடைத்தது. மற்ற ஒன்பது இடங்களிலும் எதுவும் சிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால், பள்ளம் தோண்டும் பணி நடக்கவில்லை. அடையாளம் காணப்பட்ட ஒன்பது முதல் 13 இடங்கள் வரை, பிளாஸ்டிக் கவரால் சுற்றி மூடப்பட்டு உள்ளது. பகலில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், இரவில் நக்சல் ஒழிப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று 11, 12, 13வது இடங்களில் தோண்டும் பணிகள் நடக்க உள்ளன. இதுவரை தோண்டிய 10 இடத்தில் ஒரு இடத்தில் மட்டுமே எலும்பு கூடு கிடைத்து இருப்பதாலும், புகார்தாரர் நம்பிக்கையுடன் கூறிய ஒன்பது, 10 வது இடங்களில் எதுவும் சிக்காததாலும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணையை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
100 சதவீதம் உண்மை இதற்கிடையில், தர்மஸ்தலாவில் 15 ஆண்டுகளுக்கு முன், 13 வயது சிறுமியின் உடலை சாலையோரம் பார்த்ததாக, சமூக ஆர்வலர் ஜெயந்த் நேற்று முன்தினம் இரவு எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன்பு கூறி இருந்த நிலையில், இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
நான் கூறியது 100 சதவீதம் உண்மை. எஸ்.ஐ.டி.,யில் நான் அளித்த புகாரில், என்ன இருக்கிறது என்பதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றும் அவர் கூறி உள்ளார்.
தர்மஸ்தலா வழக்கு குறித்து, பெங்களூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று பேட்டி அளிக்கையில், ''தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும், எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
எஸ்.ஐ.டி., குழுவுக்கு
ஜனாதிபதி பதக்கம்?
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீதான பலாத்கார வழக்கில் எஸ்.ஐ.டி., குழுவினர் சிறப்பாக செயல்பட்டு விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை குழு தலைவர் பி.கே.சிங் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு என் பாராட்டுகள். பலாத்கார வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்கது.
இதுபோன்ற வழக்குகள் பல ஆண்டுகள் விசாரிக்கப்பட்ட உதாரணம் உள்ளது. ஆனால், இவ்வழக்கில் 14 மாதங்களில் தீர்ப்பு கிடைத்து உள்ளது.
எஸ்.ஐ.டி., குழுவுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்படும். ஜனாதிபதி பதக்கம் வழங்கவும் பரிந்துரை செய்வேன். பிரஜ்வலுக்கு தண்டனை கிடைத்து இருப்பதை, அரசியல் நோக்கில் பார்க்க கூடாது. தவறு செய்தவருக்கு தண்டனை கிடைத்து உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.