தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஜீப் கவிழ்ந்து 3 பேர் காயம்
தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஜீப் கவிழ்ந்து 3 பேர் காயம்
ADDED : ஜூன் 17, 2026 01:56 AM

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள், பயணம் சென்ற ஜீப் விபத்தில் சிக்கியது. எஸ்.பி., உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தின் பின்னணியில் சதி உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படும் வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
இந்த குழுவின் தலைவராக சி.ஐ.டி., - டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி உள்ளார். சிக்கமகளூரு எஸ்.பி., ஜிதேந்திரகுமார் தயாமா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவில் உள்ளனர்.
இந்நிலையில், விசாரணை குழுவின் எஸ்.பி., சைமன், இன்ஸ்பெக்டர் குஸ்மாகர் ஆகியோர் நேற்று காலையில், போலீஸ் ஜீப்பில், பெல்தங்கடியில் இருந்து சிக்கமகளூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
சார்மாடி வனப்பகுதி சாலையில், சார்மாடி கிராம பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தறிகெட்டு ஓடி, இரண்டு முறை 'பல்டி' அடித்து, சாலையோரம் கவிழ்ந்தது.
அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, ஜீப்புக்குள் இருந்த இன்ஸ்பெக்டர், எஸ்.பி., மற்றும் டிரைவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சார்மாடி வனப்பகுதி சாலை குறுகலானது. வளைந்து, நெளிந்து செல்ல கூடியது. அங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது.
ஆனால் விசாரணை அதிகாரிகள் சென்ற ஜீப், அந்த வனப்பகுதி சாலைக்குள் நுழைவதற்கு முன்பாகவே விபத்தில் சிக்கி இருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
எனவே, விபத்தில் பின்னணியில் சதி உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.
