/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலாவில் பெண்கள் புதைக்கப்பட்ட புகாரில்... எஸ்.ஐ.டி., விசாரணை! டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில் குழு
/
தர்மஸ்தலாவில் பெண்கள் புதைக்கப்பட்ட புகாரில்... எஸ்.ஐ.டி., விசாரணை! டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில் குழு
தர்மஸ்தலாவில் பெண்கள் புதைக்கப்பட்ட புகாரில்... எஸ்.ஐ.டி., விசாரணை! டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில் குழு
தர்மஸ்தலாவில் பெண்கள் புதைக்கப்பட்ட புகாரில்... எஸ்.ஐ.டி., விசாரணை! டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில் குழு
UPDATED : ஜூலை 21, 2025 08:51 AM
ADDED : ஜூலை 20, 2025 09:48 PM

பெங்களூரு : தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, மஞ்சுநாதா கோவிலின் முன்னாள் ஊழியர் அளித்த புகார் குறித்து விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்து உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையிலான குழுவில், மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், சவும்யலதா, ஜிதேந்திர குமார் தயமா ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான, தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில், பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் உள்ளது. முக்கிய அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் இந்த கோவிலுக்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.
இந்த கோவிலில், 21 ஆண்டுகளுக்கு முன் ஊழியராக வேலை செய்த பீமா என்பவர், கடந்த 4ம் தேதி தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், '1998ம் ஆண்டு முதல் 2004 வரை, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் துாய்மை பணியாளராக வேலை செய்தேன்.
'இந்த காலகட்டத்தில் கோவிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட, பெண்களின் உடல்களை பார்த்து உள்ளேன். எனது மேற்பார்வையாளர் உத்தரவின்படி, பெண்களின் உடல்களை புதைத்தேன்.
இதுபற்றி வெளியே சொல்ல கூடாது என்று, மேற்பார்வையாளரிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்ததால், வெளிமாநிலத்திற்கு தப்பி சென்றேன். மனசாட்சி உறுத்தியதால் இப்போது உண்மையை கூறி உள்ளேன். பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டவும் தயாராக உள்ளேன்' என கூறி இருந்தார்.
சமூக வலைதளம்
இந்த புகாரின் அடிப்படையில், தர்மஸ்தலா போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கினர். பெல்தங்கடி நீதிமன்றத்திலும், பீமா ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சி.பி.ஐ.,யில் பணியாற்றி ஓய்வு பெற்ற, பெங்களூரை சேர்ந்த சுஜாதா பட் என்ற பெண்மணியும், 'கடந்த 2003ல் தர்மஸ்தலா சென்ற எனது மகள் அனன்யா பட்டை காணவில்லை.
அவரை கொன்று புதைத்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது' என, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில், சில தினங்களுக்கு முன் புகார் அளித்ததால், இந்த வழக்கு சூடுபிடித்தது. தர்மஸ்தலாவில் நடந்தது என்ன என்ற உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று, சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தன.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடா தலைமையில் வக்கீல் குழு, முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்டது பற்றி எஸ்.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டனர். போலீஸ் துறை கேட்டு கொண்டால் வழக்கை எஸ்.ஐ.டி.,யிடம் ஒப்படைக்க தயார் என்று, சித்தராமையாவும் அறிவித்து இருந்தார்.
மண்டை ஓடுகள்
இந்நிலையில் கர்நாடக அரசின் உள்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக அரசுக்கு, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி எழுதிய கடிதத்தில், தர்மஸ்தலாவில் நுாற்றுக்கணக்கான பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக, நீதிமன்றத்தில் ஒருவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சில ஊடகங்கள் தர்மஸ்தலாவில் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து எஸ்.ஐ.டி., விசாரணை வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக தர்மஸ்தலாவில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பெருமளவிலான மரணங்கள், இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்து உள்ளது.
தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, தர்மஸ்தலா சென்று பெண்கள், மாணவியர் காணாமல் போனதாக மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, இனி மேல் பதிவு செய்யப்பட உள்ள வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது பொருத்தமானது. பாரபட்சமற்ற விசாரணைக்காக இக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில், சிறப்பு விசாரணை குழுவின் தலைவராக, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி செயல்படுவார்.
இந்த குழுவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஐ.ஜி., அனுசேத், பெங்களூரு நகர ஆயுதப்படை டி.சி.பி., சவும்யலதா, உடுப்பி நக்சல் தடுப்பு படை எஸ்.பி., ஜிதேந்திர குமார் தயமா ஆகியோரும் இருப்பர் என்றும் அறிவிப்பு வெளியானது. எஸ்.ஐ.டி., விசாரணை விரைவில் துவங்க உள்ளது.
தர்மஸ்தலாவில் பல உடல்களை அடக்கம் செய்த வழக்கு தேசிய அளவில் பல விவாதம், ஊகம், குழப்பத்திற்கு வழிவகுத்து உள்ளது. நேர்மையான விசாரணை நடக்க வேண்டும் என்ற நோக்கில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. சமூகத்தின் ஒழுக்கம், நம்பிக்கையை அடைய வலுவான அடிப்படை உண்மை தான். இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேர்மையான விசாரணை நடத்தி, பொதுமக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவர் என்பது எங்கள் நம்பிக்கை.
- பர்ஷ்வநாத் ஜெயின், செய்தி தொடர்பாளர், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில்.