/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
1987 முதல் நடந்த மரணங்கள் துாசு தட்டுகிறது எஸ்.ஐ.டி.,
/
1987 முதல் நடந்த மரணங்கள் துாசு தட்டுகிறது எஸ்.ஐ.டி.,
1987 முதல் நடந்த மரணங்கள் துாசு தட்டுகிறது எஸ்.ஐ.டி.,
1987 முதல் நடந்த மரணங்கள் துாசு தட்டுகிறது எஸ்.ஐ.டி.,
ADDED : செப் 13, 2025 04:54 AM

தர்மஸ்தலா: தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த சின்னையாவை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. விசாரணைக்கு பின், ஷிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் கேட்டு பெல்தங்கடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நேற்று மனு மீது விசாரணை நடந்தது. சின்னையா தரப்பில், மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய நீதிபதி வாதிட்டார். சின்னையாவுக்கு ஜாமின் வழங்க, எஸ்.ஐ.டி., வக்கீல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான அடுத்த விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சின்னையா, நீதிமன்றத்தில் கொடுத்த மண்டை ஓடு, உஜ்ரேயை சேர்ந்த விட்டல் கவுடா என்பவர் கொடுத்தது என்பது, தற்போது விசாரணையில் தெரிய வந்தது.
முன்பு, எஸ்.ஐ.டி., யிடம் தன் நண்பர் பிரதீப் கவுடாவுடன் சென்று, பங்களாகுட்டா வனப்பகுதியில் இருந்து, மண்டை ஓட்டை எடுத்து வந்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கில் பிரதீப் கவுடா சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். பெல்தங்கடி நீதிமன்றத்தில் நீதிபதி சந்தேஷ் முன், நேற்று இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
நேற்று மதியம் பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகத்திற்கு சென்ற, ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் அளித்த புகாரில், ''2006 முதல் 2010 வரை தர்மஸ்தலாவில் உள்ள காயத்ரி, வைஷாலி குடியிருப்பு பகுதியில், நிறைய பெண்கள் இறந்தனர். அனாதை பிணம் என்று, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் புதைத்துவிட்டனர். இதுபற்றி விசாரிக்க வேண்டும்,'' என கூறி இருந்தார்.
வழக்கில் முன்பு விசாரணைக்கு ஆஜரான சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டன்னவர், 1987 முதல் தற்போது வரை, தர்மஸ்தலாவில் இறந்தவர்கள் பற்றிய தகவல்களை வழங்கி உள்ளார். கிராம பஞ்சாயத்து வைத்துள்ள ஆவணங்களில், தவறு இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனால் 1987 முதல் தற்போது வரை, தர்மஸ்தலாவில் நடந்த மரணம் குறித்து விசாரிக்கவும், கிராம பஞ்சாயத்து ஊழியர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவும் எஸ்.ஐ.டி., முடிவு செய்துள்ளது. இதனால் வழக்கு விசாரணை விறுவிறுப்பு எடுக்க துவங்கி உள்ளது.