/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் எஸ்.ஐ.டி., 'ரெய்டு'
/
பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் எஸ்.ஐ.டி., 'ரெய்டு'
பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் எஸ்.ஐ.டி., 'ரெய்டு'
பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் எஸ்.ஐ.டி., 'ரெய்டு'
ADDED : அக் 18, 2025 04:53 AM

கலபுரகி: ஆலந்த் தொகுதி ஓட்டு மோசடி வழக்கில் முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுபாஷ் குத்தேதாரின் வீடு உட்பட மூன்று இடங்களில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
கலபுரகி மாவட்டம் ஆலந்த் தொகுதியில், கடந்த சட்டசபை தேர்தலில் காங்., சார்பில் பி.ஆர்.பாட்டீல், பா.ஜ., சார்பில் சுபாஷ் குத்தேதார் போட்டியிட்டனர். 10,348 ஓட்டு வித்தியாசத்தில் பி.ஆர்.பாட்டீல் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் 6,000க்கும் மேற்பட்ட ஓட்டுகளை ஆன்லைன் மூலம் நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, மாநிலம் முழுதும் பதிவான ஓட்டுத் திருட்டு புகார்கள் குறித்தும் விசாரிக்க எஸ்.ஐ.டி., என்ற சிறப்பு புலனாய்வுக்குழுவை மாநில அரசு அமைத்தது.
இந்த குழுவினர் கடந்த 15ம் தேதி, கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஐந்து இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, ஜுன்ஜும் காலனியை சேர்ந்த அக்ரமின் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான வாக்காளர்கள் அட்டைகள், 15 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று கலபுரகி குப்பி காலனியில் உள்ள முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுபாஷ் குத்தேதாரின் வீட்டில், துணை போலீஸ் எஸ்.பி., அல்சான் பாஷா தலைமையிலான 20க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.டி., அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி நடத்தினர்.
இவரது மகன்களான ஹர்ஷானந்த், சந்தோஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. விவேகானந்தா நகரில் உள்ள ஆடிட்டர் மல்லிகார்ஜுனா மஹந்தகோலின் வீட்டிலும் சோதனை நடந்தது.
மல்லிகார்ஜுனாவுக்கும் வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட அக்ரமுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுபாஷ் குத்தேதார் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்கு அருகில் ஆவணங்கள் எரிக்கப்பட்டன. இதை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று உடனடியாக ஆய்வு நடத்தினர். இதை யார் செய்தது? எரிக்கப்பட்டது ஓட்டுத்திருட்டு தொடர்பான ஆவணங்களா? என, விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையில் சுபாஷ் வீட்டிலிருந்த ஆவணங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. நேற்று மாலை சோதனை முடிவடைந்தது.
சில ஆவணங்களை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.