தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஒவ்வொரு வீட்டிலும் சாண எரிவாயு சிவாஜி ககனியின் தொலைநோக்கு பார்வை

 ஒவ்வொரு வீட்டிலும் சாண எரிவாயு சிவாஜி ககனியின் தொலைநோக்கு பார்வை

 ஒவ்வொரு வீட்டிலும் சாண எரிவாயு சிவாஜி ககனியின் தொலைநோக்கு பார்வை


ADDED : மார் 29, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

: மேற்காசிய பதற்றத்தால், உலகமே எரிவாயுக்காக சிரமப்பட்டு வரும் வேளையில், கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள கிராமத்தில், 40 ஆண்டுகளாக, 'சாண எரிவாயு' பயன்படுத்தி வருகின்றனர்.

பெலகாவி மாவட்டம் கட்டனபாவி கிராமத்தில், 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள், விவசாயத்தையும், பால் பண்ணையையும் நம்பி வாழ்கின்றனர். ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் மாடுகள், எருமைகள், காளைகள் உள்ளன. அவற்றின் சாணம், கழிப்பறை கழிவுகள், சாண வாயுவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இங்குள்ள வீடுகளின் கொல்லை புறங்களில், சாண வாயு உற்பத்தி மையத்தை காணலாம். இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வாயுவை, தங்களின் அன்றாட சமையலுக்காக பயன்படுத்துவதால், மற்ற கிராமங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர்.

40 ஆண்டுகள் சாண எரிவாயு கிடைப்பதால், நகர்புற மக்களை போன்று காஸ் சிலிண்டர்களுக்காக காத்திருப்பதில்லை. 40 ஆண்டுகளாக இவர்கள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி வருவதற்கு, கடேலி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவாஜி ககனியே, 76, காரணம்.

சமையலுக்காக விறகுகளின் தேவைக்காக காடுகள் அழிக்கப்பட்டன. விறகில் இருந்து வரும் புகையால், பல்வேறு நோய்களால் பெண்கள் அவதிப்பட்டனர் இதையறிந்த சிவாஜி ககனி, புகையில்லா அடுப்புக்கு, சாண வாயு சிறந்த தீர்வு என, அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதற்காக, ஜன ஜாக்ரனே சன்ஸ்தா மற்றும் காதி கிராம அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்து, 'தீனபந்து' எனப்படும் எளிய சாண எரிப்பு கலன்கள் கட்டப்பட்டன. இதற்காக சிவாஜி ககனி, சந்தித்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. சிலர் அவர் மீது சாண நீரையும் ஊற்றினர். ஆனாலும், மனம் தளரவில்லை. அனைவருக்கும் சாண எரிவாயு கலன்களை நிறுவினார்.

சிவாஜி ககனி கூறியதாவது:

கடந்த, 1990ல் கட்டனபாவியில் இரவு பள்ளி நடத்தி வந்தேன். அப்போது, மலையில் இருந்த மரங்களும், செடிகளும் வெட்டப்பட்டு, அடுப்புக்கு விறகாக பயன்படுத்தி வந்ததை அறிந்தேன்.

விழிப்புணர்வு ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, சாண எரிவாயு கலன்கள் அமைப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த விறகில் இருந்து வரும் புகையால் பெண்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை புரியவைத்தேன்.

ஜன ஜாக்ரனே சன்ஸ்தாவின் நிதியுதவியுடன், கால்நடைகள் உள்ள அனைத்து வீடுகளிலும் சாண எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டன. தற்போது, 225 வீடுகளில் சாண எரிவாயுவில் அடுப்புகள் எரிகின்றன. எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற கட்டனபாவி கிராம மக்கள், நாட்டின் முன்மாதிரியாக திகழ்கின்றனர்.

சாண எரிவாயு கலன்கள் அமைப்பதற்கு அரசு மானியம் வழங்கி வந்தது. அந்த பணத்தை கொண்டு வீடுகளில் வசிப்பவர்கள் செங்கற்கள், மணல், சிமென்ட் ஆகியவற்றை கொண்டு வந்து, தாங்களே குழிகளை தோண்டி, கலன்களை கட்டினர்.

இவ்வாறு பெலகாவி, ஹூக்கேரி, கானாபூர் தாலுகாக்களில் பல கிராமங்களில், 30 ஆயிரம் கலன்களை நிறுவி உள்ளோம். அதன்பின், இப்பகுதியில் மரங்கள் அழிக்கப்படுவது குறைந்துள்ளது.

அரசு தாராளமாக எரிவாயு, சிலிண்டர்களை வழங்கி வந்த நிலையில், சாண எரிவாயு ஆலைகள் மூடப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. மேற்காசிய போரால், இப்போது எரிவாயு பிரச்னை எழுந்துள்ளது.

எரிவாயுவை இறக்குமதி செய்ய நாம் பிற நாடுகளை நாடி உள்ளோம். இருப்பினும், நம் நாட்டிலேயே எரிவாயுவை உற்பத்தி செய்வதற்கு தேவையான சாணம், தொழில்நுட்ப அறிவு நமக்கு தெரிந்தும், அமைதியாக இருப்பது சரியல்ல.

கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளின் வீடுகளில், சாண எரிவாயு ஆலைகளை நிறுவுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான கூடுதல் நிதியையும் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். இதனால், எரிவாயுவுக்காக மற்றவர்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us