குப்பை கிடங்கு சென்ற 300 லாரிகள் தடுத்து நிறுத்தம்; 'எஸ்மா' சட்டம் பாயும் என்று சிவகுமார் எச்சரிக்கை
குப்பை கிடங்கு சென்ற 300 லாரிகள் தடுத்து நிறுத்தம்; 'எஸ்மா' சட்டம் பாயும் என்று சிவகுமார் எச்சரிக்கை
ADDED : பிப் 19, 2026 07:27 AM

பெங்களூரு: குப்பை கிடங்கிற்கு சென்ற 300 லாரிகளை தடுத்து நிறுத்தியதால், பா.ஜ., - எம்.எல்.ஏ., தீரஜ் முனிராஜ் மீது 'எஸ்மா' சட்டம் பாயும் என்று, துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பெங்களூரு நகரில் தினமும் சேகரிக்கப்படும் 6,000 டன் குப்பைகளை கொட்டுவதற்காக, மஹாதேவபுரா தொகுதிக்கு உட்பட்ட மிட்டகானஹள்ளி, கண்ணுார், சிக்கநாகமங்களா, கன்னள்ளி, தொட்டபிதரகள்ளு, தொட்டபல்லாபூரின் பெல்லஹள்ளி ஆகிய ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இங்கு லாரிகளில் கொண்டு சென்று குப்பை கொட்டப்படுகிறது.
இந்நிலையில் மிட்டகானஹள்ளியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை நிறுத்தி நேற்று முன்தினம் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., அரவிந்த் லிம்பாவளி போராட்டம் நடத்தினர். இதனால் 300 லாரிகள் அங்கு நின்றன. அந்த லாரிகள் நேற்று காலை பெல்லஹள்ளிக்கு திருப்பி விடப்பட்டன.
நியாயம் வேண்டும் இது பற்றி அறிந்த தொட்டபல்லாபூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., தீரஜ் முனிராஜ், மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார். லாரிகளை குப்பை கிடங்கிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார். லாரிகள் கிடங்கிற்கு செல்லாமல் தடுக்க, டிராக்டர்களும் குறுக்கே நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் நீண்ட துாரத்திற்கு லாரிகள் அணிவகுத்து நின்றன.
பெல்லஹள்ளி கிராம மக்கள் கூறுகையில், 'இங்கு குப்பை கிடங்கு அமைக்கும் போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம். வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கிறோம் என்று ஜி.பி.ஏ., அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. வளர்ச்சி பணி நடக்காத போது, குப்பையை கொட்ட நாங்கள் ஏன் அனுமதி தர வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை இங்கு குப்பை கொட்ட விட மாட்டோம்,'' என்றனர்.
தேவையின்றி அரசியல் இந்த விவகாரத்தில் பெங்களூரு நகர அமைச்சரான, துணை முதல்வர் சிவகுமாரை, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஏற்கனவே பெங்களூரு நகரம் முழுதும் குப்பை கிடங்காக மாறி உள்ள நிலையில், குப்பைகளை கொண்டு சென்ற லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இனி சிவகுமாரின் செய்த அலட்சியம் என்று வசைபாடினர். இதனால் சிவகுமார் கடுப்பானார்.
அவர் கூறுகையில், ''குப்பைகளை அகற்றும் விஷயத்தில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தேவையின்றி அரசியல் செய்கின்றனர். அரவிந்த் லிம்பாவளி செய்ததை, தீரஜ் முனிராஜ் செய்கிறார். மரியாதையாக குப்பை லாரிகளை செல்ல அனுமதியுங்கள். இல்லாவிட்டால் தீரஜ் முனிராஜ் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். லாரிகளில் உள்ள குப்பைகளை கொட்டவிடாவிட்டால், அசோக், விஜயேந்திரா வீடுகள் முன்பு குப்பை கொட்டப்படும்,'' என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த தீரஜ் முனிராஜ், ''எஸ்மா சட்டத்தில் கைது செய்தாலும் சரி, என் வீட்டின் முன்பு குப்பையை கொட்டினாலும் சரி. தொகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை விட மாட்டேன்,'' என்றார்.
