/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் சித்து விவகாரத்தில் சிவகுமார் அணியினர் 'கப்சிப்!': 'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கிடையாது என்பதால்
/
முதல்வர் சித்து விவகாரத்தில் சிவகுமார் அணியினர் 'கப்சிப்!': 'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கிடையாது என்பதால்
முதல்வர் சித்து விவகாரத்தில் சிவகுமார் அணியினர் 'கப்சிப்!': 'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கிடையாது என்பதால்
முதல்வர் சித்து விவகாரத்தில் சிவகுமார் அணியினர் 'கப்சிப்!': 'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கிடையாது என்பதால்
ADDED : பிப் 09, 2025 06:53 AM

பெங்களூரு: 'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்ததன் மூலம், முதல்வர் சித்தராமையா விவகாரத்தில் சிவகுமார் அணியினர் 'கப்சிப்' ஆகி உள்ளனர். முதல்வர் பதவியை வைத்து நடந்த மோதலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்திற்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது.
துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் பதவி மீது ஆசை. 'முடா' வழக்கில் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்ததும், அவர் ராஜினாமா செய்துவிடுவார். முதல்வர் பதவியை கைப்பற்றலாம் என்ற கனவில் சிவகுமார் இருந்தார்.
ஆனால் கட்சி மேலிடம், முதல்வருக்கு ஆதரவாக நின்றது. இது, சிவகுமாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், முதல்வர் மீதான 'முடா' வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சி.பி.ஐ.,க்கு உயர் நீதிமன்றம் ஒப்படைக்கும் என்று கூறப்பட்டது. அப்படி நடந்தால், எந்த நேரத்திலும் சித்தராமையா ராஜினாமா செய்வார் என்று சிவகுமார் தரப்பு காத்திருந்தது.
சிவகுமாரும் டில்லிக்குச் சென்று, தனக்கு முதல்வர் பதவி வேண்டுமென, மேலிட தலைவர்களிடம் கேட்டு வந்தார். பா.ஜ., தலைவர்களும், சித்தராமையாவின் ராஜினாமாவுக்கு நாள் குறித்து வந்தனர்.
இந்நிலையில், முடா வழக்கில் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பு சித்தராமையாவுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. ஆனால், சிவகுமார் தரப்புக்கு விரக்தியை அளித்துள்ளது.
முடா வழக்கில் தன் மீது எந்த தவறும் இல்லையென, ஆரம்பத்தில் இருந்தே சித்தராமையா கூறி வருகிறார். தற்போது சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், முதல்வர் பதவியை விட்டு அவர் விலகும் வாய்ப்பு இல்லை.
உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும், சித்தராமையா தான் ஐந்து ஆண்டுகளுக்கும் முதல்வர் என்பது போல, அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதுவும் பேச முடியாமல், சிவகுமார் அணியினர் 'கப்சிப்' ஆகி உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையா, சிவகுமார் அணியினர் இடையே தொடர்ந்து வார்த்தை மோதல் ஏற்பட்டது. இது, மேலிட தலைவர்களுக்கு தலைவலியை கொடுத்தது.
தற்போது, உயர் நீதிமன்ற தீர்ப்பால் அடுத்த சில நாட்களுக்கு, முதல்வர் பதவி குறித்து சிவகுமார் தரப்பினர் பேச வாய்ப்பு இல்லை. இதனால் மேலிடத்திற்கும் நிம்மதி கிடைக்கும்.
முடா வழக்கில் சித்தராமையாவுக்கு எதிரான ஆவணங்களை கொடுத்ததே சிவகுமார் தான் என, பா.ஜ., தலைவர்கள் கூறினர். இதனால், நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியானதும் சித்தராமையா வீட்டிற்கு முதல் ஆளாக சிவகுமார் சென்றார்.