துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது, என் குடும்ப உறுப்பினர்கள் இறந்தது போன்ற வேதனையை தருகிறது. நம் மாநிலத்தில் இப்படி நடக்கும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த சம்பவத்தை, நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வோம். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். உயிரிழந்த ஒரு வாலிபரின் தந்தை, 'என் மகன் உடல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். அப்படியே கொடுங்கள்' என்று கதறியது, எனக்கு மிகுந்த வலி, வேதனை கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது சிவகுமார் கண்ணீர் விட்டு அழுதார்.
ஆர்.சி.பி., நிர்வாகத்திற்கு நோட்டீஸ்
மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டதால், பெங்களூரு கலெக்டர் ஜெகதீசும் நேற்று முதல் விசாரணை துவக்கினர். மைதானத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
“சம்பவத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களை சார்ந்த குடும்பத்தினர் வரும் 13ம் தேதி தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி., அணி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,” என, அவர் கூறினார்.