/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடுக்குமாடி கட்டுமானத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
/
அடுக்குமாடி கட்டுமானத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
அடுக்குமாடி கட்டுமானத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
அடுக்குமாடி கட்டுமானத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
ADDED : அக் 04, 2025 11:10 PM
கொத்தனுார்: புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடத்தில் ஆண் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பல மாதங்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு நகரின் கொத்தனுாரில் பைரதி பண்டே சாலையில் புதிதாக அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது. இது தொட்டகுப்பியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமானது. இந்த கட்டடம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததால், 10 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் கட்டடமும் பாழடைந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததால், பணிகளை மீண்டும் துவக்க உரிமையாளர் முடிவு செய்தார். பல ஆண்டுகளாக யாரும் புழங்காததால், கட்டடம் அசுத்தமாக காணப்பட்டது. இதை சுத்தம் செய்துவிட்டு, கட்டுமான பணிகளை துவக்கும் நோக்கில், தொழிலாளர்களுடன் நேற்று முன் தினம் மாலையில் கட்டடத்துக்கு வந்தார்.
தொழிலாளர்கள் கட்டடத்தை சுத்தம் செய்யத் துவங்கினர். நான்காம் மாடியில், ஓரிடத்தில் மண் குவிக்கப்பட்டிருந்தது. அதை அப்புறப்படுத்தியபோது, எலும்புக்கூடு கிடந்தது. இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், உடனடியாக உரிமையாளரிடம் கூறினர். அவரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த கொத்தனுார் போலீசார், தடயவியல் ஆய்வக வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். எலும்புக்கூட்டை மீட்டு ஆய்வகத்துக்கு அனுப்பினர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு, 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடையது. பேன்ட், சட்டை அணிந்து படுத்த நிலையில் இருந்தது.
இறந்த நபர் யார், எப்படி இங்கு வந்தார், இறப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.