ஏரிக்கரையில் மண்டை ஓடு, எலும்புகள் பெங்களூரு புறநகரில் பதற்றம்
ஏரிக்கரையில் மண்டை ஓடு, எலும்புகள் பெங்களூரு புறநகரில் பதற்றம்
ADDED : மே 17, 2026 12:33 AM

ஆனேக்கல்: பெங்களூரு புறநகரின், முகளூரு ஏரிக்கரையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பகுதியினர் பதற்றம் அடைந்துள்னர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், சர்ஜாபூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட முகளூரில் ஏரி உள்ளது. ஏரி அருகில் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் இரவு, சிலர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் மனித மண்டை ஓடும், எலும்புகளும் சிதறி கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த சர்ஜாபூர் போலீசார், மண்டை ஓடு மற்றும் எலும்புகளை பார்வையிட்டனர். தடயவியல் வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டனர். மண்டை ஓட்டை, எலும்புகளை அவர்கள் ஆய்வு செய்தனர். ஏரிக்கரையில் மனித மண்டை ஓடு கிடைத்த தகவல், காட்டுத்தீ போன்று பரவியதால், அப்பகுதியினர் பதற்றம் அடைந்துள்ளனர். யாரையாவது கொலை செய்து எரித்திருக்கலாம் என, அஞ்சுகின்றனர்.
சம்பவ இடத்தை டி.எஸ்.பி., கோபால் நாயக், சர்ஜாபூர் இன்ஸ்பெக்டர் மகேந்திர குமார், நேரில் பார்வையிட்டனர்.
போலீசார் கூறியதாவது:
சம்பவ இடத்தில் பெண்ணின் சேலை, உடைகள் கிடைத்தன. எனவே மண்டை ஓடும், எலும்புகளும் பெண்ணுடையதாக இருக்க வாய்ப்புள்ளது. ஏரியில் குதித்து அந்த பெண் தற்கொலை செய்திருக்க கூடும். தற்போது ஏரி நீரின்றி வறண்டுள்ளது. தெரு நாய்கள் அந்த மண்டை ஓட்டையும், எலும்புகளையும் கரைக்கு இழுத்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
தற்போது மண்டை ஓட்டையும், எலும்புகளையும் தடயவியல் ஆய்வக வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர். இது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
