ADDED : ஏப் 03, 2025 07:14 AM
சிக்கமகளூரு : ஹோட்டலுக்குள் நுழைந்த பாம்பு, 10 கோழி முட்டைகளை விழுங்கியது. பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின், கொட்டிகேஹாரா கிராமத்தில், உடுப்பி வைபவ் ஹோட்டல் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை, ராஜநாகம் ஒன்று ஹோட்டலுக்குள் புகுந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. சமையல் அறைக்குள் புகுந்த பாம்பு, அங்கிருந்த 10 கோழி முட்டைகளை விழுங்கியது.
ஒரே நேரத்தில் இத்தனை முட்டைகள் வயிற்றுக்குள் சென்றதால், அதன் வயிறு புடைத்துக் கொண்டது. அங்கிருந்து நகர முடியாமல் பாம்பு தவித்தது.
அறைக்குள் வந்த ஹோட்டல் ஊழியர்கள், பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாம்பு பிடி நிபுணர் ஆரிப் என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த ஆரிப், பாம்பின் வாலை பிடித்து மேலே துாக்கியதும், 10 முட்டைகளையும் பாம்பு கக்கியது. இந்த பாம்புக்கு ஹோட்டல் உரிமையாளர் பக்தியுடன் பூஜை செய்தார்.
அதன்பின் பாம்பை ஆரிப், சார்மாடிகாட் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.

