/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வனத்துக்குள் காணாமல் போன முதியவரை கண்டுபிடித்த மோப்ப நாய்
/
வனத்துக்குள் காணாமல் போன முதியவரை கண்டுபிடித்த மோப்ப நாய்
வனத்துக்குள் காணாமல் போன முதியவரை கண்டுபிடித்த மோப்ப நாய்
வனத்துக்குள் காணாமல் போன முதியவரை கண்டுபிடித்த மோப்ப நாய்
ADDED : நவ 07, 2025 11:03 PM

சிக்கமகளூரு: நடை பயிற்சிக்கு சென்று, அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித் தவித்த முதியவர், மோப்ப நாயின் உதவியுடன் மீட்கப்பட்டார்.
சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவின், குணவந்தே கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேகவுடா, 75. இந்த கிராமம், வனப்பகுதியை ஒட்டியுள்ளது. முதியவர் தினமும் வனப்பகுதி அருகில், நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம். இம்மாதம் 2ம் தேதி, நடை பயிற்சிக்கு சென்றிருந்தார். வனப்பகுதிக்குள் வழிதவறிச் சென்றுவிட்டார்.
அவருக்கு மறதிநோய் இருந்ததால், திரும்பிச் செல்ல வழிதெரியாமல் வனப்பகுதியின் நடுவில் தவித்து வந்துள்ளார். நடை பயிற்சிக்குச் சென்றவர், மாலையாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் பீதியுடன் கிராமத்தின் சுற்றுப்பகுதியில் தேடினர். எங்கும் தென்படாததால், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் வனப்பகுதிக்குள் சென்று முதியவரை தேட துவங்கினர்.
அடர்த்தியான வனப்பகுதி என்பதால், தேடுவது கஷ்டமாக இருந்தது. எனவே மோப்ப நாயை பயன்படுத்தும்படி, சிக்கமகளூரு எஸ்.பி., விக்ரம் உத்தரவிட்டார். அதன்பின் மோப்ப நாயை அழைத்து வந்து, தேட ஆரம்பித்தனர். வனப்பகுதியை ஒட்டியிருந்த இடத்தில், முதியவரின் வேட்டி கிடந்தது. அதை மோப்பம் பிடித்த நாய், வனத்துக்குள் சென்றது.
வனத்துக்குள் 5 கி.மீ., தொலைவு சென்று, மோப்ப நாய் உதவியுடன் முதியவர் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அந்த வனப்பகுதியில் அபாயமான விலங்குகள், பாம்புகள் உள்ளன. முதியவர் உணவு, நீர் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

