/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வரை மிரட்டாமல் மிரட்டும் எஸ்.என்.ஆர்.,
/
முதல்வரை மிரட்டாமல் மிரட்டும் எஸ்.என்.ஆர்.,
ADDED : ஆக 20, 2025 11:26 PM
'கோமுல்' எனும் கோலார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிறுவனத்தில், மெகா ஊழல் நடந்துள்ளது என்று, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டவில்லை. மாறாக உரிய ஆதாரங்களுடன், சட்டசபையிலேயே புகார் செய்தது; விசாரணை நடத்த கோரியது என எல்லாமே பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான எஸ்.என். நாராயணசாமி தான். தனக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், சட்டசபைக்குள் தர்ணா நடத்துவேன் என்றும் அவர் மிரட்டாமல் மிரட்டி உள்ளார்.
குற்றச்சாட்டு 'கோமுல்' சங்க தலைவர், காங்கிரசின் மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா தான். காங்கிரசாரின் கவனிப்பில் உள்ள கோமுல் நிர்வாகத்தின் மீது காங்கிரஸ்காரரே ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியது உட்கட்சியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
டி.சி.சி., வங்கி எனும் கோலார் - சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கோலார் மாவட்டத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான மாலுாரின் நஞ்சே கவுடா, கோலாரின் கொத்துார் மஞ்சுநாத், சீனிவாசப்பூரின் முன்னாள் எம்.எல்.ஏ., ரமேஷ்குமார் ஆகியோர் குற்றம்சாட்டி வந்தனர்.
இது தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் அதற்கான தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை. இவை எல்லாமே காங்கிரசுக்குள் நடந்து வரும் உள்குத்து வேலையாகவே இருந்து வருகிறது.
மாலுார், கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கும், எம்.எல்.சி.,க்கள் நசீர் அகமது, அனில் குமார் ஆகியோருக்கு மட்டுமே கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் ஆதரவாக இருந்து வருகிறார் என்பது, பங்கார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமியின் குற்றச்சாட்டு. இதனை பகிரங்கமாக பல முறை வெளிப்படுத்தி உள்ளார். ஆயினும், எஸ்.என்.நாராயணசாமி எதிர்ப்பார்த்த 'கோமுல்' தலைவர் பதவி அவருக்கு கிடைக்கவில்லை.
கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால், பிரிவினை ஏற்பட்டு, ஊழல் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.
முதல்வர் சமாதானம் கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் உள்ள தகராறுகள், முதல்வர் சித்தராமையாவிடம் சென்றன. இதற்காகவே, பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வரின் அறையில், கடந்த திங்கட்கிழமை மாலையில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுடன் முதல்வர் சித்தராமையா சமாதான கூட்டம் நடத்தினார்.
'கோமுல்' மற்றும் டி.சி.சி., வங்கி பற்றி முழுமையாக அறிந்த அவர், 'மாலுார் நஞ்சே கவுடா, பங்கார்பேட்டை நாராயணசாமி ஆகியோர் சண்டையிடாமல் வளர்ச்சி பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; வாக்குறுதி திட்டங்கள்; பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளிட்ட அரசு திட்டங்கள் தொகுதி மக்களின் வீட்டு வாசலுக்கு சென்றடைய திறம்பட செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், இரு தரப்பினரையும் கடுமையாக எச்சரித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர் தெரிவித்தார்.
ஏற்கனவே முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே, முதல்வர் பதவிக்கான பனிப்போர் தொடர்ந்து வரும் நிலையில், கோலாரின், நான்கு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருவருக்கும் சமமான நிலையில் உள்ளதாம்.
ஆனால், நான்கு பேரின் ஆதரவையும் பெற்று விட வேண்டும் என்பதற்காகவே, சமரச கூட்டம் என்ற பெயரில் முதல்வர் செயல்பட்டு உள்ளார்.
ஆனால் எஸ்.என்.நாராய ணசாமி, எதிர்பார்த்த 'விசாரணை கமிஷன்' அமைக்க, முதல்வர் தலையசைக்கவில்லையாம். முதல்வர் சித்தராமையாவுக்கு, 'ஆமாம்' சொல்ல வேண்டுமானால், காலியாக உள்ள அமைச்சர் பதவியில் தன்னை அமர வைக்குமாறு நாராயணசாமியும், 'துண்டு' போட்டுவிட்டு வந்துள்ளார்.
- நமது நிருபர் -