ரயில் பயணியருக்கு பாதுகாப்பு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ரயில் பயணியருக்கு பாதுகாப்பு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 09, 2026 11:28 PM
பெங்களூரு: பாதுகாப்பான பயணத்துக்கு, ரயில் சரியானது என, மக்கள் நம்புகின்றனர். ஆனால், சமீப நாட்களாக, ரயில்களில் நடக்கும் சம்பவங்கள், ரயில் பயணம் பாதுகாப்பானது அல்ல என, உணர்த்துகிறது.
சில நாட்களுக்கு முன், மைசூரில் இருந்து, பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த ராஜா ராணி எக்ஸ்பிரஸ் ரயில், மத்துாரு அருகில் வரும் போது, இருக்கை விஷயத்தில் தகராறு ஏற்பட்டு, மூன்று இளைஞர்கள், சக பயணியை கத்தியால் குத்தினர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ரயிலில் சக பயணியரை தாக்கியவர்களை, கைது செய்து தண்டித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு பயணியரையும், கட்டாயமாக பரிசோதித்த பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும். ரயிலில் ஏறவும் விட வேண்டும். தற்போது சம்பவம், ரயில்வே துறைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
டிக்கெட் அல்லது பாஸ் வைத்துள்ள நபர்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் ரயில் நிலையத்துக்குள் நுழைவதை, தடுக்க வேண்டும். மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணியரை 'ஸ்கேனர்' மூலமாக சோதனையிடுவது போல, சாதாரண ரயில்களிலும் அவசியம்.
அப்போது தான் ஆயுதங்கள் வைத்துள்ளவர்களை கண்டுபிடிக்கலாம். ரயில் நிலையம் மற்றும் ரயிலுக்குள் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில்வே பிரிவின் டி.ஐ.ஜி., ராஷ்மி கூறியதாவது:
மத்துார் அருகில் ரயிலில் நடந்த கத்தி குத்து தொடர்பாக, ஏற்கனவே மூவரை கைது செய்துள்ளோம். பெரும்பாலான ரயில் நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணியரை சோதனையிட, மெட்டல் டிடெக்டர் பொருத்தும்படி, அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்படும்.
ஆர்.பி.எப்., ஊழியர்களுடன், ரயில்வே போலீசாரும் ரயிலில் இருப்பர். இத்தகைய சம்பவங்கள் நடக்கும் போது, அவர்களின் கவனத்துக்கு பயணியர் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
